திருமங்கலம் காட்டு பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு இன்று காலை செல்லும் போது கோவிலில் பாண்டியர் காலத்து அடையாளங்களைப் பார்த்தேன்.அவற்றை இப்போது உங்களோடு சுருக்கமாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கோவிலில் நுழையும் போதே அமைந்துள்ள பழமையான மண்டபமும்,வாயிலுமே கோவிலின் பழமையை எடுத்துரைக்கின்றன. கோவிலின் நுழைவு மண்டபத்திலேயே இது பாண்டியர்களால் கட்டப்பட்ட கோவில் என்பதற்கு அடையாளமாக இம்மண்டபத்தின் தூணின் மேற்புறம் “இரட்டை கயல்” சின்னம் காணப்படுகிறது.
மேலும் இதே போன்று கோவிலின் கருவறை மண்டபத்திலும் பாண்டியர்களின் “இரட்டைக் கயல்(மீன்) ” சின்னம் காணப்படுவதால் இது பாண்டியர் காலத்துக் கோவில் என்பது வெகுவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் மையக் கருவறை மண்டபத்தில் இருவரின் உருவங்கள் கூப்பிய கரங்களுடன் செதுக்கபட்டுள்ளன.கோவிலுக்கு வருவோரை வணங்கி வரவேற்கும்படியான நோக்கத்தில் வடிக்கபட்டிருக்கலாம்(தென்காசியில் உள்ள பாண்டியர் சிற்பமும் கல்வெட்டும் கோவிலுக்கு தொண்டு செய்பவர்களை தான் வணங்குவதாக பாண்டியன் மன்னன் குறிப்பிட்டுள்ளதை இங்கு ஒப்பு நோக்கத்தக்கது)
சிலை 1: (கிழக்கு நோக்கி வடிக்கப்பட்டுள்ள சிலை) -கூப்பி கரம்,தலையில் கொண்டை,நீண்ட காதணி, நெற்றியில் பொட்டு,இடையில் இருந்து முழங்கால் வரை இருக்கும் ஆடை,கழுத்தில் மாலை (முத்து மாலையாக இருக்கலாம் -முத்து அணிகலன்கலன்களும் காப்பு போன்றவையுமே அக்காலத்தில் கழுத்தை ஒட்டி அணியப்படும்) , இடையில் உள்ள ஆடைக்கு மேலும் ஆபரணங்கள் இருக்கிறது .இவர் பெண்ணாக இருக்கவே வாய்ப்புள்ளது .பெண்ணாக இருக்கும் பட்சத்தில் பாண்டிய அரசியாக இருக்கலாம். எவ்வாறாகினும் இவர் அரசகுடும்பத்தவர் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை! (இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதால் காலச்சூழ்நிலையால் சிற்பங்கள் தேய்ந்துள்ளதால் இவற்றை அடையாளம் காண்பதால் சற்றே சிக்கல் தான் )
சிலை 2: (மேற்கு நோக்கி வடிக்கப்பட்டுள்ள சிலை) -கூப்பிய கரம்,தலையில் சிறைய அளவிலான ஆண்கள் கொண்டை போன்ற அமைப்பு,நீண்ட காதணி,கழுத்தை ஒட்டி மட்டுமல்லாது மார்பு வரை நீளும் அணிகலன்,இடைக்கச்சை – இவர் பாண்டிய அரசராக இருக்கலாம்
இதே மண்டபத்தில் தியான நிலையில் உள்ள ஒருவரின் சிலை உள்ளது.
இக்கோவிலிலேயே ஆராய வேண்டிய நிறைய விசயங்கள் உள்ளன இவற்றைப் பற்றியும் இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். இதே போல் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலும் பாண்டியர் காலத்துக் கோவிலே! இக்கோவிலில் இன்னும் ஓர் சிறப்பம்சமாக கருவறையை ஒட்டியுள்ள மண்டபத்தில் அழகிய வேலைபாடுள்ள சிற்பங்கள் பல உள்ளன. மேலும் கல்வெட்டுக்கள் பலவும் உள்ளன.அவை விரைவில் உங்கள் பார்வைக்கு வரும். இதே போல் திருமங்கலம் குமரன் கோவிலும் பழமையான ஒன்று இக்கோவில் பாண்டியர் காலத்துடன் சம்பந்தபட்டதா என்று ஒருநாள் ஆராய வேண்டும்!
இத்துணை பழமையான சின்னங்கள் இருந்தும் எந்த நூலிலும்,செய்தித்தாளிலும் நம் நகரின் பழமையைக் குறித்து எந்தச் செய்தியும் வெளிவரவில்லை என்பது வேதனை! ஆனால் நாம் தொடர்ந்து ஆய்ந்து எழுதி நம் நகரின் பழமையை உலகிற்கு உணர்த்துவோம்!
நன்றி: த.மாலதி -தக்கார்/நிர்வாக அதிகாரி-தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தார்