1900களின் ஆரம்பங்களிலேயே திருமங்கலத்தில் இயங்கிய பிரின்டிங் பிரஸ்
——————————————————–
கி.பி 1578 ஆண்டுகளிலேயே கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த போர்த்துகீசிய பாதிரியாரால் “தம்பிரான் வணக்கம் ” என்ற பெயரில் தமிழின் முதல் நூல் அச்சிடப்பட்டது.இருப்பினும்
20ம் நூற்றாண்டு முதற்பகுதி வரை பனை ஓலைகள் வழியாகவே பாடங்களும்,நூல்களும் இருந்தன. பெரும் நகரங்கள்,மேற்படிப்பு படிப்பவர்களுக்கு மட்டுமே அச்சு நூல்கள் இருந்தன.
அதுவும் 1900களின் ஆரம்பத்தில் இந்தியாவில் அச்சங்கள் குறிப்பிட்ட பெரும் ஊர்களில் மட்டுமே இருந்தன.
அப்படிப்பட்ட காலத்திலும் கூட 1900களின் ஆரம்பங்களிலேயே நமது திருமங்கலம் நகரில் அச்சகம் ஒன்று இயங்கி வந்தது தெரிய வருகின்றது.
ஆம்! ஶ்ரீ கிருஷ்ண விலாஸ் என்ற பெயரிலான இந்த அச்சகம் இதுவரை கிடைத்துள்ள தகவல்படி 1914ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் முதல் திருமங்கலத்தில் இயங்கி வந்துள்ளது திருமங்கலம் பக்கத்தின் வரலாற்று தேடலில் காணக்கிடைத்தது.
1914ம் ஆண்டிற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பழமையான அச்சகம் மட்டுமல்ல, இந்த அச்சகம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் புகழ் பெற்றிருந்த பல்வேறு கதை,இலக்கியங்களை அச்சு வடிவில் வெளியிட்டு அதை தமிழகம் முழுக்க விநியோகம் செய்து வந்துள்ளதும் தெரியவருகின்றது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்படி இந்த அச்சகத்தில் வெளியான “நற்குலசேகரிஎன்னும் நல்லதங்காள் சரித்திரம்” என்ற நூல் 1914ம் வருடம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அச்சகத்தால் வெளியிடபப்ட்ட வேறு நூல்கள்
ஷண்முகப்பதிகமும் கீர்த்தனங்களும்
நூல் வெளியிடப்பட்ட வருடம்: 1915
விநோத பரமாநந்த கீர்த்தனை
நூல் வெளியிடப்பட்ட வருடம்: 1922
ஆனந்த மோகன வள்ளியம்மன் சரித்திரம்
நூல் வெளியிடப்பட்ட வருடம்: 1924
இது போல் நிறைய நூல்கள் இந்த அச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கலாம் ஆனால் அது பற்றி இப்போது விவரங்கள் இல்லை.
இந்த அச்சகத்தை நடத்தியவர் யார் என்பதை தேடிய போது “ஷண்முகப்பதிகமும் கீர்த்தனங்களும்” நூலின் அட்டையில் சில விவரங்கள் கிடைத்தது.
இந்நூலின் முகப்பில் இந்நூல் “கிருஷ்ணசாமி பிள்ளையால்” தமது “ஶ்ரீ கிருஷ்ண விலாஸ்” பிரஸ்ஸில் பதிப்பக்கப்பெற்றது என்பதன் மூலம் இந்த அச்சக உரிமையாளரின் கிருஷ்ணசாமி என்பதும் இவர் தனது பெயரிலேயே இந்த அச்சகத்தை நடத்தி வந்தார் என்றும் தெரிகின்றது.
மேலும் மேற்கண்ட நூலின் அதே பக்கத்தில் “திருமங்கலம் வித்வான் பாரதசுந்தர புராணிகர்” என்ற தகவல் மூலம் இவருடைய தந்தையார் பெயர் பாரதசுந்தரம் என்பதும் இவர்திருமங்கலத்தை சேர்ந்த தமிழ் வித்வான் ( தமிழ் ஆசிரியர்) மேலும் இவர் புராணிகர் எனும் புராண நிகழ்வுகளை நிகழ்ச்சிகளில் எடுத்துரைப்பதையும் செய்து வந்தார் என்பதையும் அறிய முடிகின்றது.
அதே போல் மற்றோரு புத்தகத்தில் உள்ள தகவல் மூலம் கிருஷ்ணசாமி பிள்ளை மதுரையில் புத்தக கடை நடத்தி வந்ததும், பி.நா.சி ஏஜன்டாகவும் இருந்து வந்துள்ளது தெரிகிறது.
தந்தை தமிழ் வித்வான் என்பதால் இயல்பாகவே இவருக்கு நூல்கள் மீது ஆர்வம் பிறந்திருக்கலாம். மேலும் ஏஜன்ட் பணி மற்றும் புத்தக நிலையம் நடத்திய அனுபவம்,தொடர்பு காரணமாக அச்சகத்தை உருவாக்கி சொந்தமாக நூல்களை பதிப்பித்திருக்கலாம்.
கிடைத்திருக்கிற தகவல்படி இந்த அச்சகத்தின் முதல் நூல் 1914ம் ஆண்டும், நிறைவு நூல் 1924ம் ஆண்டும் வெளிவந்துள்ளது. வேறு தரவுகள் கிடைக்கும் போது இந்த கணக்கீடுகள் மாறலாம். எப்படி இருப்பினும் இந்த அச்சகம் குறைந்தது 10 வருடங்கள் நடந்து வந்தது என்பதை உறுதியாக கூறலாம்.
இருந்தாலும் திருமங்கலத்தின் எந்தப்பகுதியில் இருந்தது? எவ்வளவு காலம் நடந்தது? அச்சகத்தில் நூல்கள் தவிர மற்றவை அச்சடிடப்பட்டனவா என்பது போன்ற விவரங்கள் கிடைக்க வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த விவரங்களை கமேண்டில் தெரிவியுங்கள்!
குறிப்பு:
இது போன்ற வரலாற்று செய்திகளையும், திருமங்கலம் நகர வேலைவாய்ப்பு ,மின் தடை போன்ற முக்கிய செய்திகளை உங்கள் மொபலில் உடன் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளவும்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalampage.thirumangalampage