திருப்புகழ் பாடல்களை தொகுக்க உதவிய திருமங்கலம் (அறிவோம் திருமங்கலம் வரலாறு -தொடர்)
—————————————————————————-
அருணகிரிநாதர் கி.பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த முருக பக்தர் மற்றும் தமிழ் புலவர் ஆவார். முருகனின் பெயரால் ஏராளமான பாடல்களை இயற்றியுள்ளார். காலஓட்டத்தில் இவரின் பல பாடல்கள் நமக்கு கிடைக்கப்பெறவில்லை.
ஒரு சில பாடல்கள் ஓலைச்சுவடிகளாக சிலரிடம் தனிப்பட்ட பயன்பாடாகவும் , பொதுமக்கள் சிலர் பாடல்களை பாடியும் பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் திருமங்கலம் பகுதிகளில் இருந்து பெரும்பாலான திருப்புகழ் பாடல்களை கண்டறிந்து தொகுக்க உதவியுள்ளார்.
இச்செய்தியை தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதய்யர் பதிவு செய்துள்ளார் இந்த வரலாற்று செய்தி தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்ற நூலின் மூலம் நாம் அறியமுடிந்தது.
அதாவது இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தை சேர்ந்த வடக்குப்பட்டு ஊரினை பூர்விகமாக கொண்டவர். இவர் 1890 வருடங்களில் நமது திருமங்கலத்தில் முன்சீப்பாக பணியாற்றினார்.
அவர் பேரையூர் ஜமின்தார் தும்மச்சி நாயக்கரோடு பழகி அவர் பாடிய திருப்புகழ் பாடல்களை கேட்டு மகிழ்ந்துள்ளார்.
மேலும் திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கோவில்களில் பாடப்பட்டு வந்த திருப்புகழ் பாடல்களை சேகரித்து 1895ம் வருடம் திருப்புகழ் முதற்பாகம் என்ற நூலையும் , 1902ம் வருடம் திருப்புகழ் இரண்டாம் பாகம் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறாக பாடல்களை தொகுத்து நூலாக வெளியிட்டதன் மூலம் அதுவரை தனியார்களின் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் இருந்த இவை நூல் வடிவமாக்கப்பட்டு அனைவரும் பாடி பயனுறும் வகையில் எளிதாக கிடைத்தது.
அந்தவகையில் நிறைய திருப்புகழ் பாடல்களை மீட்டெடுக்க திருமங்கலம் நகர் உதவியுள்ளது என்பது வரலாற்றில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இணைப்பில் உள்ள படங்களை பார்க்கலாம்.
ஆதார நூல்: தமிழிசைக் கலைக்களஞ்சியம் ,பக்க எண்கள் 335,335
ஆசிரியர்: திரு.சுந்தரம்.
இத்திருப்புகழ் பாடல்களில் சிலவற்றை கீழே உள்ள யூடிப் லிங்கை கிளிக் செய்து கேட்கலாம்.
திருமங்கலம் வரலாறு குறித்த உங்களுக்கு தெரிந்த செய்திகளை நமது பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தியாகவோ அல்லது இப்பதிவில் கமேண்டில் இணைத்து எல்லோருக்கும் உங்கள் செய்தி கொண்டு சேர்க்க உதவலாம்.