மீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி
————————————————–
திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலின் கருவறை ஒட்டியுள்ள முன் மண்டபத்தில் ஆண்,பெண் இருவரின் உருவச்சிலைகள் காணப்படுகின்றன.
இருவரும் வணங்கிய நிலையில் காட்சி தருவதால் இவை இரண்டும் தெய்வச்சிலைகள் அல்ல என்பது உறுதி மேலும் இச்சிலைகள் மண்டபத்தூணில் இடம்பெற்றுள்ளதால் இவர்களே இந்த மண்டபத்தை கட்டியிருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம் (ஏனென்றால் இது போன்ற மண்டபங்களை கட்டியவர்களே தங்கள் சிலைகளை அம்மண்டப தூணில் நிறுவுவர் ,வேறு ஒருவர் கட்டிய மண்டபத்தில் தங்கள் சிலைகளை வைக்கும் வழக்கம் இன்று போல் அன்று இல்லை) .
பொதுவாக மனித சிலைகள் கருங்கல்லினால் அமைப்பது பரவலாக காணப்படுவதில்லை. ஆனால் இம்மண்டபத்தில் உள்ள சிலைகள் இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருங்கல்லினால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
ஆண் சிலை (பார்க்க படம் 1)
—————–
உடலில் உள்ள ஆடையின் அமைப்பும் ,கையில் உள்ள மோதிரமும் ,முக அமைப்பும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
பெரிய விரிந்த கண்கள்,நீளமான மூக்கு, கைகளில் மோதிரம் , மாலை போன்ற அணிகலன், இடையில் இருந்து முழங்காலுக்கு முன்பதான ஆடை . இழுத்து கட்டப்பட்ட ஆடை போன்ற ஆடை என்பதால் ஏறக்குறைய இன்றைய வேட்டி போன்ற அமைப்பிலேயே உள்ளது.
பொதுவாக அரசனை சிலைவடிவில் காட்டும் போது இடுப்பில் குறுவாள் ,கத்தி போன்றவற்றை காட்டுவார்கள் .இச்சிலையில் அது போன்று ஏதும் இல்லை என்பதாலும் தலையில் கிரீடம் போன்ற அமைப்போ அல்லது வேறு எந்த ராஜ அடையாளங்களோ இல்லாததால் இவர் அரசராக இருக்க வாய்ப்பு மிக குறைவு.
ஒருவேளை அரசராக இருந்து முடியை வாரிசுகளிடம் வழங்கிவிட்டு இறைப்பணியில் ஈடுபட்டவராக கூட இருக்கலாம்.
மேலும் அரசர்கள் குடுமி அல்லது கொண்டை அணிவதை சிலைகளில் காட்டுவார்கள் ஆனால் இச்சிலையில் உள்ளவருக்கு அது போன்ற அமைப்பு இல்லாதது மட்டுமல்ல இவருக்கு குறைவான முடியே இருக்கும்படியாக சிலை அமைப்பு உள்ளது.
ஆகவே இவர் நிச்சயம் நடுத்தர வயதை கடந்தவராக இருந்திருக்க வேண்டும்.
ஆகவே இவர் அரசபதவி துறந்த அரசராகவோ, அமைச்சராகவோ ,வணிகராகவோ அல்லது வேறு எவராகவோ இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஆட்சியில் இருந்த மன்னர் மட்டும் இல்லை என்பதை உறுதியாக சொல்லலாம்.
பெண் சிலை (பார்க்க படம் 2)
———–
அடுத்து அருகில் இருக்கும் பெண் சிலையை பார்போமானால் அதுவும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இடையில் இருந்து பாதம் வரை நீளும் ஆடை .நிச்சயமாக இன்றைய சேலை போன்ற அமைப்பு தான். முத்து மாலை போன்ற அணிகலன் .கைகளில் வளையல்கள்.
மீன் சின்னங்கள் (பார்க்க படம் 3,4)
——————
இதே மண்டபத்தில் இரண்டு இடங்களில் பாண்டிய மன்னர்களின் மீன் மற்றும் செண்டு சின்னமும் இடம்பெறுகின்றன.
பொதுவாக மீன் சின்னம் என்றவுடன் பாண்டிய மன்னர்களின் சின்னம் என்று நாம் முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஆனால் சில இடங்களில் நாயக்க மன்னர்களும் பாண்டியர்களின் மீன் சின்னத்தை தங்களின் படைப்புகளில் பதித்துள்ளனர் என்பதை வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.
இது ஏன் என்றால் மீன் என்பது வளமையின் அடையாளம் ஆகும் அதாவது மீன் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான ஏன் சில மீன்கள் இலட்சக்கணக்கான முட்டைகளை இடும் தன்மையுடையது. ஆகவே தான் வளமையின் அடையாளமான மீன் சின்னத்தை யாதவர்களான பாண்டிய மன்னர்கள் தங்கள் குலச்சின்னமாகிய ஆடு மேய்ப்பவர்களின் துரட்டி எனும் சென்டு சின்னத்தோடு , வளமையின் அடையாளமாகிய மீன் சின்னத்தையும் சேர்த்து தங்கள் சின்னமாக பயன்படுத்தியுள்ளனர் என்பது வரலாற்றின் வழியே அறிந்து கொள்ளும் செய்தியாகும்.
இவ்வாறு பாண்டியர்கள் பயன்படுத்திய வளத்தின் அடையாளமாகிய மீன் சின்னத்தை அவர்கள் பின்னால் வந்த நாயக்க மன்னர்களும் வளமையின் அடையாளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் இந்த மீனின் அமைப்பு பாண்டியர்களால் அமைக்கப்பட்ட மீன் சின்ன அமைப்பில் இருந்து வேறுபடுவதாலும் நடுவில் இருக்கும் செண்டு வடிவமும் பாண்டியரின் சமகாலத்தில் இருந்து வேறுபடுகின்றது.
அதே போல் நாயக்க மன்னர்களின் சிலைகள் தொப்பையுடன் காணப்படுகின்றன ஆனால் இச்சிலையிலோ தொப்பைக்குரிய அடையாளங்கள் இல்லை என்பதால்
நம் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் பாண்டியர் காலத்து மண்டபமா அல்லது பின்னால் வந்த மன்னர்கள் எழுப்பிய மண்டபமா இல்லை மன்னர் தவிர்த்து மற்றவர்கள் எழுப்பியதா என்று குழப்பம் ஏற்படுகிறது.
இது பற்றி வேறு ஏதேனும் செய்திகள் கிடைக்கப்பெற்றால் இதில் நமக்கு தெளிவு கிடைக்கும்.
இதே மண்டபத்தில் மற்றோரு இடத்தில் உத்தரத்தில் ஓர் சிலை ஒன்று தரையில் படித்தவாறு இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. அதாவது ஓர் மனித உருவம் தலைக்குமேலே தன் கைகளை குவித்தவாறு காட்டப்பட்டுள்ளது.(பார்க்க்க படம் 5)
தென்காசி கோவிலில் உள்ள தென்காசி பாண்டியர்கள் மற்றும் வேறு இடங்களிலும் , வேறு அரசர்கள் ,மற்றவர்களின் இது போன்ற அமைப்பிலான சிலைகள் காணப்படுகின்றன. இது போன்ற சிலை அமைப்புகளின் கீழே
இத்தர்மத்தை (தானத்தை) காப்பாற்றி கடை பிடித்தவர் பாதங்கள் என் தலை மேல் என்ற கல்வெட்டுவரிகள் காணப்படும் .
இச்சிலையின் அருகே எந்த கல்வெட்டு அருகே எந்த கல்வெட்டும் காணப்படவில்லையென்றாலும் இதற்கும் அதே அர்த்தம் தான்.
அதாவது இந்த மண்டபத்தை எவர் காத்து நின்றாலும் அவர்களின் பாதத்தை என் தலைமேல் வைத்து தாங்குவேன் என்று இச்சிலையில் காட்டப்பட்டுள்ளவர் குறிப்பிடுகிறார் . ஆகவே இச்சிலையில் உள்ளவர் இந்த மண்டபத்தை கட்டியவர் என்பது உறுதி.
பொதுவாக கோவிலில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஒரே காலத்தில் கட்டப்படுவதில்லை. கோவில் கருவறை அமைப்பு ஒரு அரசரால் கட்டப்பட்டால் மண்டபங்கள், மற்ற அமைப்புகள் போன்றவை பின்னால் வருகிற மற்றவர்களாலும் அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்படுவதுண்டு.
இம்மண்டபத்தின் சிலையில் உள்ளவர் அரச அடையாளத்துடன் காணப்படவில்லை ஆனால் கோவிலின் நுழைவு மண்டபத்தில் உள்ள வாள் ,ஆபரணங்கள் மற்றும் கொண்டை போன்ற அரச அடையாளங்களுடன் காணப்படுகின்றார்.அதை மற்றொரு நாள் பார்ப்போம்.
குறிப்பு
கருவறைக்கு முன்பாக நுழையும் இடத்தில் கீழே கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது இதை படியெடுத்து வெளியிடும் பட்சத்தில் கோவிலுக்கான வரலாற்று புதிர் வெளியாகலாம்.
இக்கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தெளிவான பதிவு
வாழ்த்துக்கள்
கொண்டை போன்ற அடையாளங்கள் இருந்தால் அவர்கள் நாயக்கர்கள்