திருமங்கலம் பற்றிய பழைய நினைவுகள் – மற்றவர்கள் எழுதிய பதிவிலிருந்து
———————————————————–
நமது ஊர் திருமங்கலம் கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னால் வடக்கே உசிலம்பட்டி ரோட்டையும், தெற்கு மற்றும் மேற்க்கே குண்டாற்றையும்,
கிழக்கே புகைவண்டி நிலையத்தையும் எல்லையாக கொண்டு இருந்திருக்கிற.

இதற்கு நடுவில்தான் எல்லா சமூகத்தவரும் சமயத்தவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாக பண்பாக பாசமாக பழகி வாழ்ந்திருக்கிறார்கள்.

நம்மூர் குண்டாற்றிற்க்கு ஒரு பெருமை உண்டு.அதாவது கங்கையைப்போல காவிரியைப்போல கடைசியில் கடலில் கலந்து விடும் பெருமை உடையது. வைகை நதி கூட ராமநாதபுர மாவட்டத்தின் ஒரு கண்மாயில் கடைசியில் கலந்து மறைந்து விடும்.
அப்படிப்பட்ட குண்டாற்றில் எப்பவும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்குமாம். நல்ல வெய்யில் காலத்தில் கூட கொஞ்சமாவது தண்ணீர் ஓடுமாம்.

அந்த குண்டாற்றின் ஒரு பகுதிதான் சிங்க ஆத்து. ஆற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு எதிரே உள்ளதுதான் சிங்க ஆத்து. அங்கே ஆண்கள், பெண்கள்
குளிப்பதர்க்கென்றே தனித்தனியே கல் படிக்கட்டுகளுடன் கூடிய குளிக்கும் பகுதி உண்டு. படிக்கட்டுகள் அமைந்த இடத்தில் சிங்க உருவம் செதுக்கிய சிலைகளும் உண்டு. எனவே அந்த பகுதி சிங்க ஆத்து என்று அந்நாட்களில் அழைக்கப்பட்டது.

காலையில் இந்த பகுதி கலகல என்று காணப்படும். சிறுவர்கள் படிக்கட்டுகளின் மேல் பகுதியின் ஒரு முனையிலிருந்து ஹோ என்ற இரைச்சலுடன் ஓடி வந்து டமால் டமால் என ஆற்றில் வரிசையாக குதிப்பார்கள். தண்ணீர் சிதறி குளித்து முடித்து வெளியேறும் பெண்கள் மீது படும். அவர்கள் சிறுவர்களை திட்டிக்கொண்டே உடம்பை துடைத்துக்கொண்டே வெளியேறுவார்கள். அதற்குள் அடுத்த செட் சிறுவர்கள் அந்தர் பல்டி அடித்துக்கொண்டு ஆற்றில் பாய்வார்கள். மீண்டும் தண்ணீர் சிதறி பெண்கள் மீது படும். திரும்பவும் பெண்கள் கொபிபார்கள். சிறுவர்கள் சிரிப்பார்கள்.

முன்பெல்லாம் நம்மூரில் நிறைய எருமை மாடுகள் வளர்ப்பார்கள். எல்லோருடைய மாடுகளையும் ஒன்று சேர்த்து ஆற்றிக்கு ஓட்டிச்சென்று குளிப்பாட்டி திரும்பவும்
அவைகளை வீடு வந்து சேர்க்க சம்பளத்திற்கு ஆட்கள் உண்டு. ஆற்றிக்கு ஓட்டிச்சென்று குளிப்பாட்டி குளித்து முடித்து ஆற்றை விட்டு வெளியேறும் மாடுகளின் உற்சாகத்திற்கு அளவே இராது “திங்கடி, திங்கடி” என அவை ஸ்ரீ மாரியம்மன் கோவில் மேடு வரை வேகமாக ஓடி வரும். நாம்தான் அவை நம் மீது முட்டி விடுமோ எனப்பயந்து ஒதுங்குவோம். ஆனால் அவை நம் மீது முட்டாமல் மோதாமல் வளைந்து நெளிந்து ஓடி நம்மை கடக்கும்.

நம்மூர் பெரிய கடை வீதி ஒரு காலத்தில் உண்மையிலே பெரிய கடை வீதியாகத்தான் இருந்திருக்கிறது. கடை வீதி எப்பவும் கல கலப்பாக இருக்குமாம். வியாபாரம் கன ஜோராக
நடக்குமாம். அங்கிருந்து மாட்டு வண்டிகளில் தேனீ, உசிலம்பட்டி விருதுநகர் போன்ற
ஊர்களுக்கு வியாபாரிகள் சறுக்கு வாங்கிச்சென்றிருக்கிரார்கள். சரக்கு ஏற்றிச்செல்லும் மாட்டு வண்டிகளின் மணி ஒலி இரவு நடுச்சாமம் வரை கேட்டுக்கொண்டே இருக்குமாம்.

பருவ மழை தவறாமல் பெய்து வந்தமையால் ஊரைச்சுற்றியுள்ள வயல் வெளிகளில் நெற்பயிர் நன்கு விளைந்து பச்சைப்பசேல் என்று காணப்படும். அறுவடைக்காலங்களில் ஸ்ரீ பத்திர காளியம்மன் கோவில் மேட்டில் அறுத்த நெற்பயிரை பரப்பி நெல்லை பிரிப்பார்கள். அந்த வேலை சுமார் இரண்டு மாத காலம் நடக்கும். அங்கு வேலை பார்ப்பவர்களுக்கென்றே
கொட்டகை போட்ட தற்காலிக ஹோட்டல்கள் நிறைய முளைத்திருக்கும். அதிகாலையிலே திறந்திருக்கும் அவற்றில் அவித்த மொச்சை, கிழங்கு, கருப்பட்டி சேர்த்த சுக்கு காபி கிடைக்கும். அந்த காலங்களில் சீனியின் உபயோகம் அதிகமில்லை. இனிப்பிற்கு கருப்பட்டி அல்லது வெல்லம்தான் பயன்படுத்துவார்கள்.

ஆடி மாதங்களில் சிறுவர் முதல் இளைஞர்கள் வரை பட்டம் விடுவார்கள். இளைஞர்கள் சாதாரண சைசில் பட்டம் விடுவதில்லை. இப்போது விளம்பரங்களுக்கு தட்டி போர்டு
வைக்கிறார்களே அந்த சைசிற்குபட்டம் தயாரிப்பார்கள். அதன் வாலில் தண்ணீர் நிரம்பிய
பழைய பித்தளைக்குடத்தை கட்டுவார்கள். அந்த அளவு பெரிய பட்டத்தை தூக்கிக்கொண்டு பறக்குமலவிற்கு அப்படி ஒரு பேய்க்காற்று ஆடி மாதங்களில் அந்நாட்களில் அடிக்கும்.
ஐப்பசி,கார்த்திகை மாதங்களில் தொடர்ந்து நாள்கணக்கில் தொடர்ந்து நாள்கணக்கில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டும் தூரிக்கொண்டும் இருக்குமாம்.

நம்மூர் கோவில்களில் மிகப்பழைமையான கோவில்களில் ஸ்ரீமாரியம்மன் கோவிலும் ஒன்று அந்த கோவிலில் திருவிழா வருடாவருடம் வைகாசி மாதத்தில் பதின்மூன்று நாட்கள்
நடைபெறும். சுத்துப்பட்டி பதினெட்டு கிராம மக்களும் கலந்து கொள்ளும் ஒரே திருவிழா
அது. நான் சிறுவனாக இருக்கும் போது திருவிழா நாட்களில் கோவிலை நோக்கிச்செல்லும் அத்தனை ரோடுகளிலும் மக்கள் சிரிப்பும் கும்மாளமாக வந்தும் போய்க்கொண்டும்
இருப்பார்கள்.

மாலை நேரங்களில் திருவிழா களை கட்டி விடும். இப்போது எல்லாம் செய்தித்தாள், ரேடியோ, தொலைகாட்சி போன்ற பல்வேறு ஊடகங்களில் விளம்பரம் செய்கிறார்கள்.
அந்நாட்களில் இம்மாதிரியான திருவிழா காலம்தான் விளம்பரம் செய்ய ஏற்ற காலம் மாதிரிக்கு ஒன்று கீழே தருகிறேன்

சுமார் பத்து பன்னிரண்டு வயது நிரம்பிய சிறுவர்கள் விளம்பர வாசகம் எழுதிய சிறு தட்டி போர்டை கையில் வைத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு கத்திகொண்டே தெருத்தெருவாக
செல்வார்கள்.

பெரிய பையன் : கோபாலா?

மற்றவர்கள் : ஏன் சார்?

பெரிய பையன் : எங்கே போறே?

மற்றவர்கள் : கடைக்குப்போறேன்

பெரிய பையன் : என்ன வாங்க?

மற்றவர்கள் பீடி வாங்க

பெரிய பையன் : என்ன பீடி

மற்றவர்கள் சொக்கலால் பீடி.

பெரிய பையன் : என்ன பீடி?

மற்றவர்கள் : சொக்கலால் பீடி.

பெரிய பையன் : என்ன சொக்க?

மற்றவர்கள் : லால் சொக்க

பெரிய பையன் : என்ன சொக்க?

மற்றவர்கள் : லலால் சொக்க

பின்னர் திரும்ப முதலிலிருந்து கோபாலா என்று கோரஸாக ஆரம்பிப்பார்கள். பார்க்க கேட்க சுவராஸ்யமாக இருக்கும்.

மாலையில் ஐந்து மணியிலிருந்து விளம்பதாரர்களின் விளம்பர ஆட்டங்கள் ஆரம்பித்து விடும். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என ஒவ்வரு குழுவினரும் ஒவ்வரு தெரு
முக்கிலும் சுமார் அரை மணி நேரம் ஆடி அடுத்த தெரு முக்கை தேடி செல்லுவார்கள். பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் ஜிகு ஜிகு என பள பளக்கும் ஆடைகள் தக தக என மின்ன ஆடுவார்கள். கொல்லரம்பட்டரை திடல் என அந்நாட்களிலும் விஸ்வநாத தாஸ் கலை அரங்கு என இன்று அறியப்படும் இடத்தில் பீடிக்கம்பனிக்காரர்கள் நடத்தும் வள்ளி திருமணம், கதம்ப காமிக் நிகழ்ச்சிகள் விடிய விடிய நடக்கும். அதே நேரத்தில் மாரியம்மன் கோவில் மேட்டில் பாட்டுக்கச்சேரி நடக்கும். அன்றைய பிரபல பின்னணி பாடகர்கள் வந்து பாடிச்சென்ற இடம் அது. மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தோஷமாக அங்கும் இங்கும் சென்று கொண்டேயிருப்பார்கள்

இவற்றில் எல்லாம் நாட்டமில்லாத என்னைப்போன்றவர்கள் குண்டாற்றின் புல்தரையில்
[ கவனிக்கவும் புல்தரை ] உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். தீவட்டிகளின் வெளிச்சத்தில் ஸ்ரீ மாரியம்மன் நகர்வலம் வரும். பக்தர்கள் திருக்கண் வைத்து தேங்காய் உடைத்து பரவசத்துடன் சாமி கும்பிடுவார்கள். பெண்கள் விரதம் பெண்கள் விரதம் இருந்து
முளைப்பாரி எடுப்பார்கள். ஆண்கள் பால்குடம் எடுப்பார்கள். கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி
எடுப்பார்கள். கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நேர்த்திகடன் செலுத்துவார்கள்.மண்ணெண்ணெய்
விளக்கு வெளிச்சத்தில் சாலையோர வியாபாரிகள் உற்சாகத்துடன் கடை பரப்பி தொண்டை கிழிய கத்தி தூள் பரத்துவார்கள். ரிப்பன், வளையல் விற்கும் கடைகளில் பெண்கள் கூட்டம் அலை மோதும். எவ்வளவு சந்தோஷமான நாட்கள் அவை?

அவற்றையெல்லாம் இப்போது நினைத்துப்பார்க்கும்போது நடிகர் விவேக் ஒரு சினிமாவில் சொல்லுவது போல “எப்படி இருந்த ஊர் இப்படி ஆகி விட்டதே?” என நினைக்கத் தோன்ருகிறது

செய்தி : திரு.A.Siva Siddarthan
https://sivasiddarthan-name-is-enough.blogspot.com/2011/06/blog-post_9451.html

புகைப்படம்: திருமங்கலம் பக்கம்.


2 thoughts on “திருமங்கலம் பற்றிய பழைய நினைவுகள் – மற்றவர்கள் எழுதிய பதிவிலிருந்து ———–…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *