குட்டி நாயக்கன் கண்மாயில் பழமையான வடிகால் அமைப்பு
——————————————————————-
திருமங்கலம் மறவன்குளம் கண்மாய்யை ஒட்டி தற்போதையை சியோன் நகர் எதிர்புறம் அமைந்துள்ளது குட்டி நாயக்கன் கண்மாய் எனப்படும் நீர்பிடிப்புப் பகுதி (தற்போதைய ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இந்த கண்மாயின் உள்ளே தான் அமைக்கப்பட்டுள்ளது). சரி விசயத்திற்கு வருவோம்!
குறிப்பிட்ட இந்தக் கண்மாயில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுக்கச் சென்ற போது கண்மாயில் புராதனமான ஒரு கட்டிட அமைப்பு இருந்தது நமது கவனத்தை ஈர்த்தது.
அதை கவனித்த போது அது கண்மாயிலிருந்து நீரை வெளியேற்றி வெளியே கொண்டு செல்லும் அமைப்பு என்பது தெரிந்தது. ஆனால் இது எல்லா கண்மாய்களிலும் உள்ள அமைப்பு தான் என்றாலும் இந்த அமைப்பிலிருந்த நுட்பம் நம் கவனத்தை ஈர்த்தது.
ஆம் இன்று போல் தண்ணீரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல இரும்பு அல்லது பிளாஸ்டிக் பைப்புகள் இல்லாத காலத்தில் மிகவும் நுட்பமாக அதே நேரம் நேர்த்தியாக செய்யப்பட்ட வடிகால் அமைப்பு என்பதாலேயே நம் கவனத்தை ஈர்த்தது என்று குறிப்பிட்டதற்கு காரணமாகும்!
இங்கு நாம் பகிர்ந்துள்ள புகைப்படங்களை கவனித்தால் இந்த உண்மை விளங்கும்!
பாறையை நீளமாக (பாலம் போல் வெட்டி ) நீரை கடத்துவதற்கு பைப் போன்று பயன்படுத்தியுள்ளார்கள். பாறையை பயன்படுத்தியுள்ளதால் இது ஆயிரக்கணக்காண வருடங்களாக இருந்தாலும் நிலைத்து நிற்கும் என்பதாலேயே இந்த அமைப்பை இங்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.!
இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் பாலமாக வெட்டிய பாறையை கீழே கிடத்தி அதன் பக்கவாட்டில் இருபுறமும் அதே போல் நீளமான பாறை வைத்து அதன் மேலும் பாறையை வைத்து நடுவில் மட்டும் தண்ணீர் பயணிக்கும் படியாக அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
நான்குபுறமும் பாறைகளை வைத்து இந்த அமைப்பு விலகாமல் இருக்க செங்கற்கட்டுமானத்தை வைத்து பூசி மூடியுள்ளனர். ஆகவே பாறைகள் எங்கும் விலகாமல் பிடிப்புடன் இருக்கும் தண்ணீர் பாறைகளுக்கு இடையே பாய்ந்து கண்மாயின் வெளியே செல்ல ஏதுவாகும்! நன்றாக கவனித்தால் இது ஓர் எளிமை போல் தோன்றக் கூடிய ஆனால் நேர்த்தியான அமைப்பு முறை ஆகும்!
இந்த அமைப்பில் பாறைகள் பைப் போன்று பயன்படுத்தப்பட்ட விதம் பிளாஸ்டிக் அல்லது அதற்கும் முந்தைய இரும்பு பைப்புகள் பயன்பட்ட காலத்திற்கும் முற்ப்பட்டு இருக்கும் என்பதை உணர முடிகின்றது.
மேலும் பாறைகளுக்கு மேல் உள்ள செங்கல் கட்டுமானத்தில் தற்காலத்தில் பயன்படும் சிமெண்ட் பயன்படுத்தப்படாமல் மண் சாந்து கொண்டு கட்டப்பட்ட அமைப்பு இருப்பதால் நிச்சயம் இது பழமையான கட்டுமானம் என்பதை உறுதியாக சொல்லலாம்!
எப்படி இருந்தாலும் இது 250-300 வருட பழமையான அமைப்பு என்பதை உறுதியாக சொல்லலாம். ஆனால் அகழ்வாராய்ச்சியில் பயிற்சி பெற்றவர்கள் இருந்தால் இந்த செங்கல்லின் அமைப்பு கொண்ட்டே இதன் காலத்தை இன்னும் துல்லியமாக கணிக்க முடியும்!
எப்படி இருந்தாலும் இந்த வடிகால் அமைப்பு 250-300 வருடம் பழமையானது என்பதை சொல்வதோடு சமீப காலம் வரை சுமார் 70-80 வருடங்களுக்கு முன்பு வரை இந்த பழமையான அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இதன் அருகில் கிடைக்கும் மற்ற அமைப்புகள் நமக்கு விளக்குகின்றன.
அதாவது இந்த பழமையான அமைப்பின் அருகில் வேறு சில வடிகால் அமைப்புகளும் நம் பார்வைக்கு பட்டன. அதாவது மதகு போன்ற நீர் வெளியேற்று அமைப்பும் அதன் அருகில் சமீபத்தில் பயன்படக்கூடிய மின் மோட்டார் அமைப்பும் இருந்துள்ளது தெரிகின்றது!
முதலாவதாக இந்த மதகு அமைப்பு தற்போது நாம் காணும் சதுர பாறை வெட்டுக் கற்கள் வடிவத்தில் இருப்பதாகும் ,இதன் கட்டுமானத்தில் சிமெண்ட் பயன்பட்டிர்ப்பதாலும் இந்த அமைப்பு 70-80 வருடங்களுக்குள்ளாக வழக்கத்தில் அமைந்த அமைப்பு என்று தெரிகிறது.
இதன் அருகில் ஓர் சிமிண்டில் கட்டப்பட்ட ஓர் அறை இருப்பதும் அந்த அறையில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுப்பதைப் பார்க்கும் போது இங்கு மின் மோட்டார் பயன்படுத்தி நீரை இறைத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
மறவன்குளம் கண்மாயில் இருந்து நீர் வெளியேறி அது இன்று மெட்டல் பவுடர் கம்பெனி இருக்கு இடத்தில் உள்ள வயல்களில் பாய்ந்ததையும் அந்த வயல்களில் நீர் வளம் நிறைந்திருந்த காலங்களில் எனது தந்தையார் வயல் நண்டுகள்,அயிரை மீன், இறால் போன்றவற்றை வாங்கி வந்ததும் எனது நினைவில் உள்ளது.
மேலும் திருமங்கலம் பெரியவர்கள் முன்பு எனக்கு சொன்ன விசய்ங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
தற்போது சியோன் நகர் எனப்படும் பகுதி முன்பு வயல்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இங்கு வெலம நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் நில உரிமையாளர்களாக சமீப காலம் வரை இருந்துள்ளார்கள். ( இவர்கள் தான் பூர்வீக உரிமையாளர்களாக இருந்தார்களா அல்லது நிலம் கைமாறி வந்ததா என்பது தெரியவில்லை) ஆனால் இன்றைய சியோன் நகர் பகுதி வயல் வெளியாக இருந்ததை உறுதியாக அறிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பிட்ட இந்த கண்மாயிக்கு “குட்டி நாயக்கன் கண்மாய்” என்ற பெயர் மக்கள் வழக்கத்தில் இருந்ததை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
மேலும் மறவன் குளம் முதல் கால்வாய் வழியாக தண்ணீர் தற்போதைய திருமங்கலம் பேருந்து நிலையம் வரை வந்ததாக திரு. A.A.S.S.காமராஜ் வேல் நாடார் அவர்கள் முன்னர் ஒரு நேர்காணலில் என்னிடம் தெரிவித்திருந்தார். தற்போதைய திருமங்கலம் பேருந்து நிலையமே கண்மாயாக இருந்து பின்னாளில் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
புலனாகும் வரலாற்று உண்மைகள்
——————————————–
மேற்கூறிய எல்லா விசயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதன் வரலாறு ஓரளவுக்கு புலனாகிறது!
அதாவது இந்த பாறை வடிகால் அமைப்பு 250-300 வருடங்களுக்கு மேல் நீரை வெளியே வெளியே எடுத்துச் செல்லும் வடிகால் அமைப்பாக பயன்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இன்றைய சியோன் நகர் பகுதியில் இருந்த வயல்கள் நீர் வளம் பெற்றிருக்கின்றன.
உபரி நீர் இன்றைய திருமங்கலம் பேருந்து நிலையம் இருந்த இடத்தில் அமைந்திருந்த கண்மாய் வரை பயணித்துள்ளது.
அதன் பின் சில காலம் கழித்து நீர் வெளியேற்றும் மதகு போன்ற அமைப்பு பயன்பட்டுள்ளது .அது 70-80 முன்பு வரை பயன்பட்டுள்ளது தெரிகின்றது.
அதன் பின் வந்த காலங்களில் கண்மாயில் நீர் வரத்து குறைந்திருக்க வேண்டும்! அதனால் தான் மின் மோட்டார் பொருத்தி நீர் இறைக்கும் அமைப்பு உருவாகி இருக்கின்றது.
அதற்கும் பின்பான காலங்களில் நீர் சரிவர கிடக்காத காரணத்தால் இந்த மின் மோட்டார் நீர் இறைக்கும் அமைப்பும் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த கண்மாயிக்கு “குட்டி நாயக்கன் கண்மாய்” என்ற பெயர் மக்கள் வழக்கத்தில் இருப்பதால் ஒருவேளை இந்த கண்மாய் நாயக்கர் காலத்தில் பயன்பாட்டிற்கு வந்திருக்கலாமோ என்ற எண்ணம் உருவாவதை தடுக்க முடியவில்லை.
இல்லை அதற்கு முன்பே கூட இந்த அமைப்பு இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் மேலும் செய்திகள் கிடைக்கும் போது முழு உண்மைகள் அறியக் கிடைக்கலாம்.
எது எப்படி இருந்தாலும் 250-300 வருடங்கள் அல்லது அதற்கும் முன்பாகவே நுட்பமான நீர் வெளியேற்றும் அமைப்பு நம் திருமங்கல்ம் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பது நமக்கு பெருமையான விசயம் தான்!
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்!
—————————-
இது குறித்து உங்களின் சின்ன சின்ன செய்திகளும் ஆலோசனைகளும் பெரிதும் உதவும். உங்கள் ஆலோசனைகளை கமேண்டில் அளியுங்கள் .நன்றி
வாழ்த்துக்களுடன்!
மு.சக்தி கணேஷ்
Thirumangalam .org தளத்திற்க்காக
We’re is it located?
தண்ணீர் வரத்து இல்லையே
கப்பலூர் ரயில்வே கேட் அருகே அமைந்துள்ளது வினாயகர் கோயில் கிணறு அமைத்து உள்ளது நேரில் பார்த்தால் தான் அதன் அமைப்பு தெரியும்
உங்கள் பதிவு அனைத்தும் நன்று. திருமங்கலம் பற்றி உங்களின் பதிவுகள் தொடரட்டும்.