இன்று கல்வியில் குறிப்பிடத்தக்க இடத்தை விளங்கும் நம் திருமங்கலத்திற்கு ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் திருமங்கலம் பி.கே.என் பள்ளியில் பணிபுரிந்த திரு.எம்.அருணாச்சலம் என்றால் அது மிகையில்லை!
அதுவரை திருமங்கலத்தில் சராசரியாக நடைபெற்றுக் கொண்டிருந்த கல்விப்பணி ,இவர் பி.கே.என் ஆண்கள் பள்ளியில் பணியாற்றிய காலத்தில் வெகு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு பி.கே.என் பள்ளியை கல்வித் தரத்தில் வெகு உயரத்தில் கொண்டு சென்றதோடு ,மற்ற பள்ளிகளையும் இந்தப் போட்டியில் பங்கேற்க வழிவகுத்தது.
திரு.எம்.அருணாச்சலம்,அன்றைய விருதுபட்டி(இன்றைய விருதுநகரில்) 1912ம் ஆண்டு அக்டோபர் 14ல் பிறந்தார்.மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ படிப்பும்,திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் எம்.ஏ படித்து அன்றைய சென்னை மகாணத்தில் மாநிலத்திலேயே 2ம் மாணவராகத் தேறினார்.இவர் அன்றைய நாளில் புகழ்பெற்ற பொருளாதார ஆசிரியர் ஆங்கிலேயர் கார்டியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வியை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த திரு.எம்.அருணாச்சலம் அவர்கள் ஆசிரியர் பணியை விரும்பி ஏற்றார்.முதலில் விருதுநகர் கேந்திரிய வித்யாசாலா பள்ளியில் 6 ஆண்டுகள் பணியாற்றிய இவர்,1941ம் வருடம் நமது திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
1956ம் வருடம் பி.கே.என் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார்.அதே வருடத்தில் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணியும் வழக்கத்தையும் கொண்டு வந்தார்.
திருமங்கலம் பி.கே.என் பள்ளியின் தற்போதைய செயலர் திரு. AASS.காமராஜ்வேல் நாடார் அவர் குறிப்பிடும் போது “திரு.எம்.அருணாச்சலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய காலமே,இப்பள்ளியின் பொற்காலம் ஆகும் அவரது அயராத உழைப்பாலும்,திறமையாலும் பி.கே.என் மேல்நிலைப்பள்ளி பல்வேறு வகைகளில் வளர்ச்சி கண்டது. நேர்மை,துணிவுடைமை,ஒழுக்கம் இவற்றைப் போதிக்கும் நல்லாசிரியராக திரு.எம்.அருணாச்சலம் அவர்கள் திகழ்ந்தார்”
புகைப்படத்தில் இருப்பவர்கள்
சபாரியுடன்,கண்ணாடி அணிந்து வீற்றிருப்பவர் ,”திரு.எம்.அருணாச்சலம்
முன்வரிசையில் வேட்டியுடன், திரு.எம்.அருணாச்சலம் அவர்கள் அருகில் அமர்ந்திருப்பவர் திரு.AAS.செல்வமணி நாடார்(பி.கே.என் பள்ளியின் தற்போதைய செயலர் திரு. AASS.காமராஜ்வேல் நாடார் அவர்களின் தந்தை)
பி.கே.என் பள்ளியில் தலைமைஆசிரியராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல்,1948 முதல் 1952 வரை சென்னை மாகாண மேல்நிலைக் கல்வி வாரியத்தில் பணியாற்றினார்.இவ்வமைப்பே மேல்நிலை கல்வி பாடத்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.மேலும் இவர் 1952 முதல் 1966 வரை பாடத்திட்டக்குழு உறுப்பினராக இருந்தார்.எஸ்.எல்.சி ஆங்கிலப் பாடத்திட்டத்தில் நான் -டிட்டெயில் உயர்கமிட்டியில் 6 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார்.
இவரது கல்விச் சேவையைப் பாராட்டி 1960-61ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
அன்னார் பிறந்த இந்த அக்டோபர் மாதத்தில் திருமங்கலம் மக்கள் சார்பாக அவருடைய பணியை நினைவுகூருவதில் Thirumangalam.org இணையதளம் பெருமை அடைகிறது.
நன்றிகள்
திரு. AASS.காமராஜ்வேல் நாடார்-செயலர் பி.கே.என் பள்ளி(அரிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்காக)
திரு.சரவணன் – ( செய்தித்தாள் பிரதி வழங்கியமைக்காக)
தினமலர் நாளிதழ்(திருமங்கலம் செய்தியாளர்)
Remembering Head Master Arunachalam Inspirer of Thirumangalam Schools