சாத்தங்குடி ஊர் பெயர்க் காரணம் -அறிவோம் திருமங்கலம் வரலாறு

சாத்தங்குடி ஊராட்சி திருமங்கலத்திற்கு மேற்கே 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இன்று ஊராட்சியாக சிறிய கிராமமாக அறியப்படும் இவ்வூர் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெயருகிற அளவிற்கு சிறப்பிடம் பெற்ற ஊராகும்.

 

சாத்தங்குடி இதன் பெயரைக் கேட்டவுடனேயே இது சாத்தன் எனும் வணிகக் குழு சம்பந்தப்பட்ட பெயராக இருக்கும் என்பதை வரலாற்றை ஆழ்ந்து படித்து வந்தவன் என்கிற வகையில் எடுத்த எடுப்பிலேயே நம்மால் இதை உணர முடிந்தது!

ஆனாலும் எல்லோருக்கும் புரிய வேண்டும் அல்லவா !அதனால் இக்கருத்தை வரலாற்று செய்திகளுடன் ஒப்பிட்டு தெரிந்து கொள்வோம்.

முதலில் சாத்தன் ,சாத்து என்பது வணிகக் கூட்டத்தினரை குறிக்கும் பெயராகும். வணிக சம்பந்தப்பட்டவர்கள் சாத்தன்,சாத்துவன் என்ற பெயர்களை கொண்டவர்களாக இருந்ததை வரலாறு நெடுகிலும் அறிய முடியும்.

அவ்வளவு ஏன் நாம் எல்லோருக்கும் மிகவும் அறிமுகமான இலக்கியமான சிலப்பதிகாரத்தின் நாயகன் கண்ணகியின் கணவனான கோவலன் “மா சாத்துவன்” எனும் (மா என்றால் பெரிய,சாத்துவன் என்றால் வணிகன் – பெரும் வணிகனின் ) மகன் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே!

மேலும் சிலப்பதிகாரத்திற்கு சற்றே பின்னால் வந்த பழம் இலக்கியமான “மணிமேகலை” எனும் நூலின் ஆசிரியர் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் கூலம் எனும் தானியங்களை வணிகம் செய்த வணிகர் என்பதை வரலாற்றஞர்கள் சொல்லும் செய்தியாகும் இவருடைய பெயரின் பின்னாளும் சாத்தான் என்ற பெயர் உள்ளதை அறிந்து கொள்ள முடியும்!

இவ்வாறு வணிகர்கள் சாத்தன் என்ற பெயர் கொண்டு முடிவதை நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் கொண்டு விளக்கமுடியும்.

அதே போல்
வணிகப்பண்டங்களை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் வணிகர் கூட்டம் “சாத்து” என அழைக்கப்பட்டது.அவ்வகை வணிகர் “சாத்து வணிகர்” என அழைக்கப்பட்டனர்.
எ.டு
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு -பெரும்பாணாற்றுப்படை
நோன் பகட்டு உமணர் ஒழுகை-சிறுபாணாற்றுப்படை
சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11, 190)

ஆகவே சாத்தன், சாத்து என்பது வணிகர்கள் சம்பந்தப்பட்ட ஊர் பெயர் என்பது தெளிவு!

தமிழ்நாட்டில் சாத்து,சாத்தன் என்பதாக கொண்ட ஊர் பெயர்கள் நிரம்ப உள்ளன. சாத்தான்குளம் ,சாத்தூர் ,சாத்தனூர் என்று நிறைய நிறைய வணிக சம்பந்தப்ட்ட ஊர் பெயர்கள் தமிழ்நாட்டில் இன்னும் உள்ளன.

 

 

ஆகவே நமது திருமங்கலம் அருகில் அமைந்துள்ள சாத்தங்குடி எனும் இவ்வூரும் வணிகர்களுடன் சம்பந்தப்ட்ட பெயராகவே இருந்திருக்க வேண்டும்! இதனை thirumangalam.org வெப்சைட்டில் 20 ஜனவரி 2018 அன்று சாத்தங்குடி பெயர் காரணம் என்ற பெயரில் இலக்கிய ஆதாரங்களோடு கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.ஆனால் பொதுவான இலக்கிய ஆதாரங்களை குறிப்பிட்ட இந்த ஊரோடு வெறுமனே சம்பந்தப்படுத்தி ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புக் கொள்ள மனம் இடம் தரவில்லை.

அவ்வாறு திருமங்கலம் வரலாறு குறித்து திருமங்கலம் அருகில் கிடைத்த கல்வெட்டுச் செய்திகள் குறித்து ஆராய்ந்த போது குறிப்பிட்ட சாத்தங்குடி கண்மாயில் பழமையான வேறு ஓர் கல்வெட்டு பற்றிய செய்தி கிடைத்தது.

இக்கல்வெட்டினை தமிழக அரசு தொல்லியல் துறை அதிகாரிகள் பிரதி எடுத்து தங்கள் கல்வெட்டுக்கள் நூலில் வெளியிட்டிருந்தனர். அதன் மூலம் கல்வெட்டுச் செய்தியை படித்தறிந்தோம் ஆனால் கல்வெட்டினை நாம் சென்று நேரில் பார்த்து படித்துப் பார்போம் என்று இன்று (19 அக்டோபர் 2019) சாத்தங்குடி ஊருக்கு நேரில் சென்று கண்மாயின் மடை அமைந்துள்ள பகுதியில் சென்று பார்த்த போது குறிப்பிட்ட அந்த கல்வெட்டு காணக்கிடைக்கவில்லை.

ஆனால் அதிசயத்தக்க வகையில் வேறு ஒர் காட்சி காணக்கிடைத்தது. சாத்தங்குடி கண்மாயின் நடுவே பீடம் ஏற்படுத்தப்பட்டு அதில் ஓர் சிலை வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அதைப் பார்த்தவுடனேயே அது சாத்தன் எனும் வணிகர்கள் சம்பந்தப்பட்ட தெய்வம் என்பதை உடன் நான் அறிந்து கொண்டேன்.

 

ஏன் என்றால் பெரும்பாலான சிலைகள் முழுவதும் உட்கார்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ இருக்கும் ஆனால் சாத்தன் உருவம் எப்போதும் ஒரு காலை மடக்கி அமர்ந்த நிலையில் அதுவும் குறிப்பாக இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் இருக்கும் என்பதால் இது சாத்தன் சிலை தான் என்பதை வெளிப்படையாகவே தெரிந்தது.

மேலும் இது ஓர் பழமையான சிலை என்பதுவும் இதன் அமைப்பிலேயே தெரிந்தது ஏன் என்றால் சாத்தன் எனும் வணிக சம்பந்தப்பட்ட இந்த தெய்வம் பின்னாளில் அய்யனார் என்ற பெயர் மாற்றம் பெற்று இந்து மத கடவுளாக மாற்றப்பட்டு இப்போது கிராமங்களில் முக்கிய சிறு தெய்வமாக மாற்றப்பட்டு விட்டது.

ஆனால் இந்த உருவம் பழைய சாத்தன் உருவத்திலேயே இருப்பதாலலும் சிலையின் தன்மையைப் பார்க்கும் போது இது பழமையான தெய்வ வடிவம் என்பதை உறுதியாக சொல்ல முடியும்!

ஆகவே இந்த பழமையான சாத்தன் சிலை சாத்தங்குடி கண்மாயின் நிலை கொண்டிருப்பது கொண்டு நாம் இலக்கிய ஆதாரங்களில் கண்ட செய்தியை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.அதாவது இந்த சாத்தங்குடி ஊரானது சாத்தன் எனும் வணிகர்கள் சம்பந்தப்பட்ட பெயரே என்பது இலக்கிய ஆதாரத்தினை கொண்டும் இந்த பழமையான தொல்லியல் ஆதாரத்தை கொண்டும் உறுதி செய்தி கொள்ள முடிகின்றது.

மேலும் குறிப்பிட்ட சாத்தங்குடி வணிகப்பெருவழிப்பாதையில் அமைந்திருந்ததும் இவ்வூரைச் சுற்றி பழங்கால வணிகம் சம்பந்தப்பட்ட பல ஊர்கள் அதே பெயரில் இன்றும் உள்ளதும் இச்செய்தியை உறுதி செய்கின்றது.

மேலதிக தகவல்( வணிக சம்பந்தப்பட்ட சாத்தன் என்பவர் எப்படி தெய்வமானார்)
———————————————————————————————————

ஆகவே மேலே உள்ள ஆதாரங்களைப் பார்த்து சாத்தங்குடி என்ற பெயர் வணிக சம்பந்தப்பட்ட பெயர் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். சாத்தங்குடி என்பது வணிக சம்பந்தப்பட்ட பெயர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

அதனால் இது வணிகர்கள் அல்லது வணிகம் தொடர்புடைய குடியினர் வாழ்ந்த ஊர் என்பதால் தான் சாத்தங்குடி(சாத்தன் குடி) என்று பெயர் பெற்றது என்பதை அறிய முடிகின்றது.ஆகவே இதுவே சாத்தங்குடி பெயர் தோன்றியதன் பிண்ணனி ஆகும்.

அடுத்து இந்த சாத்தங்குடி ஊரில் பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இதனை சற்றே ஆராய்வோம்!

சாத்தங்குடி கல்வெட்டு
—————————–
சாத்தங்குடி மடைக் கண்மாய் மடைக்கல்லில் கி.பி 13ம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுச் காணப்பட்டது. கல்வெட்டு இயற்கை காலசூழ்நிலை காரணமாக பெரிதும் சிதிலமலைடந்து விட்டது. இருப்பினும் எஞ்சியுள்ள செய்திகளை தமிழக அரசு தொல்லியல் துறையினர் படியெடுத்து தங்கள் மதுரை மாவட்ட கல்வெட்டுக்கள் நூலில் வெளியிட்டுள்ளனர்.

இக்கல்வெட்டுச் செய்தி கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஆதாரம்: மதுரை மாவட்ட கல்வெட்டுக்கள் -தொகுதி 2 ,கல்வெட்டு எண் 267/2003 வெளியீடு: தமிழக அரசு தொல்லியல் துறை

பிற்காலப் பாண்டியரின் காலத்திய இக்கல்வெட்டில் விச்ச்சாதரனான பல்லவரையன் என்பவன் குறிப்பிடப்படுகிறான். இவன் இந்த ஊருக்காக நிலத்தை தானமாக அளித்துள்ளான் அந்த நிலத்தின் எல்லைகள் இக்கல்வெட்டுச் செய்தியில் குறிப்பிடப்படுகின்றன.

இவன் பாண்டிய அரசின் அதிகாரியாக பணிபுரிள்ளான் என்பதை இக்கல்வெட்டு செய்தியில் உள்ள”சேவகன்” என்கிற வாசகம் தெளிவுபடுத்துகிறது. கல்வெட்டுச் செய்தி சிதைந்துள்ளதால் எதற்காக நிலதானம் செய்தான் என்பது தெரியவில்லை. ஆனால் நிலதானம் கொடுத்த நிலத்தின் எல்லைகளை கல்வெட்டுச் செய்தியில் ஒருவாறு அறிய முடிகிறது.

சரி இந்த பாண்டிய அரசனின் அதிகாரி யார் என்று ஆராய்வதற்கு இக்கல்வெட்டுச் செய்தி மட்டும் போதாது என்பதால் இவ்வூரைச் சுற்றியுள்ள மற்ற கல்வெட்டுச் செய்திகளையும் தீவிரமாக ஆராய்ந்த போது விடை கிடைத்தது!

விச்சாதரப் பல்லவராயன் -இவன் யார்?

—————————————————————

இவனது பெயர் முன்புள்ள கல்வெட்டு வரிகள் அழிந்துள்ளதால் இவனது இயர் பெயரை அறிந்து கொள்ள முடியவில்லை ஆனால் இவனது குலப்பெயரையும் ,பட்டத்தையும் இதே ஊருக்கு சற்று தொலைவே கிடைத்துள்ள சமகால கல்வெட்டுச் செய்தி கொண்டு ஒப்பீடு செய்து முடிவுக்கு வர முடிகின்றது.

இந்த சாத்தங்குடி கல்வெட்டில் “விச்சாதிரன்” , “பல்லவரையன்” என்ற பட்டங்கள் காணக் கிடைக்கின்றன. இந்த இரு பட்டங்களும் அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த அகம்படியர் இனத்தவர் கொண்டிருந்த பட்டப்பெயர்களாகும். இதனை இப்பகுதி அருகில் உள்ள மற்ற கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

பல்ல்வரையன் பட்டப் பெயர்
———————–
இந்த பல்லவராயன் பட்டம் அகம்படியர் சமுதாயத்தினருக்கான பட்டமா என்பதைக் காண சாத்தங்குடிக்கு சற்றே தொலைவில் உள்ள மேலதிருமாணிக்கம் என்ற ஊருக்கு பயணம் செய்ய வேண்டும்.இவ்வூரில் இதே காலகட்டத்தைச் சேர்ந்த பாண்டியர் காலத்துக் கல்வெட்டில் “தேவர் தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையன்” என்ற கல்வெட்டுச் செய்தி கிடைத்துள்ளது.

கீழ்கண்ட தேவர் தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையன் என்பவன் மேலத் திருமாணிக்கம் கோவிலுக்கு 6 பசுக்களை தானம் அளித்துள்ளான்.ஆனால் நாம் இந்த கல்வெட்டுச் செய்தியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இவன் அகம்படியர் சமூகம் என்று குறிக்கப்பட்டுள்ளதும் இவனுக்கு பல்லவராயன் என்கிற பட்டம் இருந்ததும் என்பதாகும்.

 

ஆதாரம்: மதுரை மாவட்ட கல்வெட்டுக்கள் -தொகுதி 2 ,கல்வெட்டு எண் 210/2003 வெளியீடு: தமிழக அரசு தொல்லியல் துறை

சாத்தங்குடி கல்வெட்டும்,இந்த மேலதிருமாணிக்கம் கல்வெட்டும் ஒரே காலம்(கி.பி 13ம் நூற்றாண்டு) என்பதையும் , இந்த இருகல்வெட்டுக்களும் அருஅருகே கிடைத்திருப்பதையும் ,இரண்டும் பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பதை வைத்துப் பார்க்கும் போது சாத்தங்குடி கல்வெட்டில் விச்சாதிரப் பல்லவரையன் என்று குறிப்பிடப்படுவன் இந்த ஊரில் இருந்த ஓர் அகம்படியர் இனத்தவன் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆகவே இதனைக் கொண்டே சாத்தங்குடி கல்வெட்டு குறிப்பிடும் பல்லவரையன் என்பவன் அகம்படியர் இனத்தவன் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இருப்பினும் மற்றொரு செய்தி கொண்டும் இதனை உறுதி செய்தி கொள்ளலாம்

விச்சாதரன் பட்டம்
————————
விச்சாதரன் என்ற பெயர் வாணர் குலத்துடன் சம்பந்தப்ப்ட்ட பெயராகும். வாணர் என்போர் சேரர்களின் கிளைக்குடியினர் இவர்கள் சங்ககாலம் முதல்
தமிழ்நாட்டினை ஆட்சிசெய்த பழம் குடியினர் .

இந்த வாணாதிராயர்கள் தங்களை வெட்டுமாவலி அகம்படியர்கள் என்று கல்வெட்டுக்களிலும் கணக்கன் கூட்டத்தார் செப்பேடுகளிலும் தங்களை அழைத்துக் கொண்டுள்ளனர்.

இவர்கள் சங்க காலத்திலேயே சோழ மன்னர்களுடன் மண உறுவு கொண்டுள்ளனர் இதனை

மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.

‘நீரிற் பெய்த மூரிவார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு,

(மணிமேகலை 19. 51 – 116).

 

இந்த புகழ்பெற்ற வாண அரசர்களில் வாண வித்தியாதரன் எனவும் வாண விச்சாதர பிரபுமேரு என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.
விக்கரம சோழனின் 4ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில் வாணகோவரையன் வேண்டுகோளின்படி எலவானரூர் அருகில் மலைய விச்சாதிரி நல்லூர் என்ற ஊரை ஏற்படுத்தியுள்ளான். Reference: Annual Report on Epigraphy 168/1606 -Central Government of India
விக்கரம சோழனின் 6ஆம் ஆட்சி ஆண்டில் விருதராஜப பயங்கர வாண கோவரையன் வாணவிச்சாதிரி நல்லூரிலுள்ள முடிகொண்ட சோழ ஈச்சரமுடைய மாதவருக்கு திருப்பணி செய்துள்ளான் Reference : ARE-Annual Report on Epigraphy 112/1895–Central Government of India
அழகர் கோயிலில் உள்ள கல்வெட்டில் வாணவிச்சாதரன் என்ற பாண்டிய அதிகாரி ஒருவன் குறிக்கப்படுகின்றான்-Reference : பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள், வேதாசலம்

மேலும் பலகல்வெட்டுகளில் விச்சாதிரி என்ற குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

இதில் இருந்து வாணர் குலத்தவர்கள் விச்சாதரன் என்ற பெயரை பயன்படுத்தி வந்ததை அறியலாம்.

வாணர் குலத்தவர் அகம்படியர் இனத்தவரே என்பதை அறிய சாத்தங்குடிக்கு இன்னும் சற்றே தொலைவில் காலத்தின் பின்னோக்கி சென்றால் இன்றைய உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூர் (கட்டக் கருப்பன்பட்டி) எனும் ஊரில் ஓர் கல்வெட்டுச் செய்தி காணக் கிடைக்கின்றது.

இகல்வெட்டுச் செய்தியில் ” வாணாதிராயர் அகம்படி முதலிகளில் பெரியான் உய்ய வந்தானான விக்ரம சிங்க தேவன்” என்கிற வாணர் குலத்தவன் பற்றிய செய்தி கிடைக்கின்றது.

ஆதாரம்: மதுரை மாவட்ட கல்வெட்டுக்கள் -தொகுதி 2 ,கல்வெட்டு எண் 352/2003 வெளியீடு: தமிழக அரசு தொல்லியல் துறை

முடிவு:
பல்லவரையன் என்கிற பட்டமும் விச்சாதரன் பட்டம் ஆகிய இரண்டு பட்டங்களும் அதே காலகட்டத்தில்(கி.பி 13ம் நூற்றாண்டில்) இதே பகுதியில் வசித்த அகம்படி இனத்தவர்களுக்கு இருந்ததை ஆதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த சாத்தங்குடி கல்வெட்டுச் செய்தியில் குறிப்பிடப்படும் விச்சாதரன் பல்லவரையன் என்பவன் அகம்படியர் இனத்தைச் சேர்ந்தவன் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட இந்த சாத்தங்குடி கல்வெட்டின் காலம் கி.பி 1300 என்பதால் அகமுடையார் சமூகத்தினர் இந்த ஊரில் இன்றில் இருந்து 700 ஆண்டுகளுக்கும் முன்பாக வசித்து வருகின்றனர் என்பதை அறிய முடிகின்றது.

சாத்தங்குடி ஊரில் இதுவரை கிடைத்துள்ள ஒரே ஒர் கல்வெட்டு என்பதால் இக்கல்வெட்டுச் செய்தியை முழுமையாக அறிய தலைப்பட்டோம். வேறு கல்வெட்டுச் செய்திகள் கிடைத்தால் சாத்தங்குடி பற்றி மேலும் அறிய முடியும்!

ஆனால் வரலாற்றை ஆய நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது!

We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo