திருமங்கலமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் திடமான கரிசல் மண் பூமியாகும்.இந்த மண் இயற்கையிலேயே பருத்தி உற்பத்திக்கு ஏற்றது.இங்கு விளையும் பருத்தி உயர் தரமானது( மென்மையான பஞ்சு ஆனால் உறுதியான நூல் ) இதற்கு இந்த கரிசல் மண்ணே காரணம்.
பருத்தி ஏற்றுமதியையே பிரதான தொழிலாக கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியார் இதனை நன்கு உணர்ந்து தங்களின் பருத்தி உற்பத்திக்கு திருமங்கலம் தாலுகாவையே பிரதானமான பகுதியாகக் கருதினர்.பின்னாளில் திருமங்கலம் தாலுகா உருவாக இதுவே ஒர் முக்கிய காரணமும் ஆயிற்று.நில அளவீடு,பருத்தி உற்பத்தி, அங்கிலேயே குடியிருப்புப் பகுதிகள் பின் குடியிருப்பில் வசிப்போருக்காய் சர்ச்,பள்ளி, பின்பு மிசனரி போன்றவை திருமங்கலத்தில் உருவாகின.
மேலும் சதுரகிரி மலை மற்றும் இன்ன பிற மலைப்பகுதிகளில் இருந்து திருமங்கலத்திற்குள் பாயும் குண்டாறும் பருத்தி உற்பத்திக்கு மட்டுமல்லாது இன்ன பிற பயிர்கள் குறிப்பாக சோளம்,கம்பு,திணை போன்றவை உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின.இன்று நாம் பார்க்கும் குண்டாறு அன்றைய பெரும் குண்டாற்றின் ஒர் எச்சம் மட்டுமே,அன்று குண்டாற்றில் எவ்வளவு வெள்ளம் வந்தது என்றால் 1700 களின் பிற்பகுதியில் கமுதி கோட்டையை தரைமட்டம் ஆக்கும் அளவிற்கு வெள்ளம் வந்ததாம்(இது பற்றிய விரிவான பதிவு இன்னோரு நாளில்) . இருப்பினும் குண்டாற்றின் இப்பொழுது உள்ள கரைகளை மேம்படுத்தினாலே திருமங்கலம் மட்டுமல்லாது இராமநாதபுரம் ,சிவகங்கை மாவட்டங்களும் நீர்வசதி பெரும் என்பது மறுக்க முடியாத உண்மை.
குறிப்பு
ஆனால் இவை தோன்றுவதற்க்கு பல வருடங்களுக்கு முன்பே டிராவலர்ஸ் பங்களா (திருமங்கலம் சந்திப்பு பகுதி என்பதால்) உருவாக்கப்பட்டு ஒர் நிர்வாக அமைப்பும் ஆங்கிலேயரால் திருமங்கலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கும் முன்பே ஆற்காட்டு நவாப்பும் அதற்கு முன்பு மதுரை நாயக்க மன்னர்கள் திருமங்கலத்தை வெறும் காடு மற்றும் விவசாயப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதியாக உருவாக்கியிருந்தனர்(திருமங்கலத்தின் முழு வரலாறு பின்னாளில்)