புதுநகர் பகுதி திருமங்கலத்தின் அழகிய தெருக்களை கொண்ட பகுதி,விசாலமான தெருக்களும்,தெருவின் இருபுறங்களிலும் உள்ள மரங்களும்,பூச்செடிகளும் என ஏதோ நேற்று அமைக்கப்பட்ட பகுதி போன்று தோற்றத்திலும் பெயரையும் கொண்டுள்ள புதுநகர் பகுதிக்கென்று தனிப்பட்ட வரலாறு உண்டு!
இன்றைய புதுநகர் பகுதி 1950ம் ஆண்டுகளிலேயே உருவாக்கப்பட்டு விட்டது என்று சொன்னால் நமது ஊர்கார்களுக்கே ஆச்சரியமான செய்தியாகத் தான் இருக்கும் ஆனால் இன்றைய புதுநகர் பகுதியின் வளர்ச்சிக்கான விதை 1950ம் ஆண்டுகளிலேயே மேற்கொள்ளப்பட்டது.1950களுக்கு முன்னால் திருமங்கலம் நகரின் மையப்பகுதியில் இருந்து சற்றே தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இப்பகுதியை மேம்படுத்த ,இப்பகுதியில் கூட்டுறவு வீட்டு கட்டும் சங்கம் ஏற்படுத்தப்பட்டு(இன்றும் இச்சங்கம் திருமங்கலம் ரவுண்டான பகுதியில் செயல்பட்டு வருகிறது.) முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக இச்சங்கத்தின் செயலாளராக திரு.A.A.S.செல்வமணி நாடார் பதவி வகித்த காலத்தில் இந்நகர் உருவாக்கப்படுவதற்க்கும் ,மேம்படுத்தப்படுவதற்க்கும் பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இப்பகுதியில் வீடு கட்ட நிலம் வாங்குவோருக்கு தவணை முறையில் வீடுகட்டும் கடன் தாராளமாக வழங்கப்பட்டது. அந்நாட்களில் ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு குறைந்த சம்பளம் என்பதால் இப்பணியில் உள்ளவர்கள் பலர் வீடு வாங்கத் தயங்கிய போது சங்கத்தின் செயலாளர் திரு.A.A.S.செல்வமணி நாடார் அவர்கள் தவணை முறையில் வீடு வாங்கும் திட்டத்தை எடுத்துக்கூறி,குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பலர் இப்பகுதியில் இடம் வாங்க உதவினார்.அதே போல் ஒவ்வொரு மனையின் வீட்டுபதிவும் உடனுக்குடன் எந்த வித கையூட்டு முறையும் இன்றி விரைவாகவும் ,எளிதாகவும் பதியப்பெற இவர் உதவியதும் இப்பகுதியில் பலரும் மனைப்பகுதிகளை வாங்க ஊக்குவித்தது.
திரு.A.A.S.செல்வமணி நாடார்-செயலாளர்,.கூட்டுறவு வீட்டு கட்டும் சங்கம்,திருமங்கலம்
முதல் முறையாக குடிதண்ணீர் விநியோகம்
மேலும் திருமங்கலத்திலேயே முதல் முறையாக புதுநகர் பகுதியிலேயே குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.இதற்காக மூன்று குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு இக்கிணறுகளில் உள்ள நீர் இதற்காக புதிதாய் அமைக்கப்பட்ட மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் ஏற்படுத்தப்பட்டது.இதற்காய் இணைப்பு ஒன்றுக்கு மாதம் ரூபாய் 4 குடிநீர் வரியாக வசூல் செய்யப்பட்டது.
கீழே உள்ள புகைப்படம் திருமங்கலம் வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படம் ஆகும்.1950ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இப்பகுதி உருவாக்கப்பட்டபோது இப்பகுதி மக்களுக்கு ,குடிநீர் சேவையை அன்றை அமைச்சர் திரு.பக்தவச்சலம் ஆரம்பித்து வைத்த அரிய புகைப்படம் ஆகும்.
படத்தில் இருப்பவர்கள்
திரு.பக்தவச்சலம்( அன்றைய அமைச்சர்)
திரு.இராஜாராம் நாயுடு -( அன்றைய அமைச்சர்) மற்றும் தலைவர்,கூட்டுறவு வீட்டு கட்டும் சங்கம்,திருமங்கலம்
திரு.A.A.S.செல்வமணி நாடார்-செயலாளர்,.கூட்டுறவு வீட்டு கட்டும் சங்கம்,திருமங்கலம்
மு.சி.சோணைத் தேவர்-சேர்மன்,திருமங்கலம் யூனியன்
P.P.P.சிதம்பரம் நாடார் -முன்னாள் திருமங்கலம் பேருராட்சி(அந்நாளில் திருமங்கலம் பேருராட்சி) தலைவர்.
குறிப்பு
அன்றைய நாளில் திருமங்கலத்து கிணறுகள் குடிப்பதற்கு ஏற்றதாகவும்,சுவையாகவும் இருந்தது,இன்றைய நிலையை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை
அன்று இருந்த மூன்று கிணறுகளும் ,மேல்நிலைத் தொட்டிகளும் இன்றும் உள்ளன.முதலாவது புதுநகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்க வளாகத்திலேயே உள்ளது.,இரண்டாவது இதே பகுதியில் ,தற்போது லிங்கா பள்ளி அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே உள்ள வெட்ட வெளிப்பகுதியாகும்,மூன்றாவது இராஜாராம் தெருவில் (புதுநகர் E.B) நிலையம் உள்ள தெருவில்,இளைஞர்கள் பேட்மின்டன் ஆடும் பகுதியில் அமைந்துள்ளது.
வெகு நாட்களாக புதுநகர் என்ற பெயரில் இருந்த இந்தப் பகுதி ,ஜவஹர்லால் நேரு இறந்த பிறகு அவர் பெயரால் ஜவஹர்நகர் என பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டது.