மதுரை-உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் ,உசிலம்பட்டிக்கு 3-4 கி.மீட்டர் முன்பு கட்டக்கருப்பன்பட்டி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது ஆனையூர் கிராமம்!

படங்களைப் பெரிதாகவும்,தெளிவாகவும் பார்க்க  குறிப்பிட்ட படத்தினை கிளிக் செய்யவும்!அதிகப் படங்கள் உள்ளதால் படத்தின் அளவை வெகுவாக சுருக்கியுள்ளோம்! பொறுத்தருளவும்!

படம்: மதுரை-உசிலம்பட்டி நான்குவழிச்சாலை(ஆனையூர் பிரிவு சந்திப்பு)

படம்: மதுரை-உசிலம்பட்டி நான்குவழிச்சாலை(ஆனையூர் பிரிவு சந்திப்பு)

படம்: ஆனையூர் செல்லும் பிரிவுச் சாலை!

படம்: ஆனையூர் செல்லும் பிரிவுச் சாலை!

இன்று  பிரபலமாக இருக்கும் உசிலம்பட்டியில் வெறும் சாதாரண கிராமமாக இருக்கும் இந்த ஆனையூர் 1000(800-900) வருடங்களுக்கு முன் வாணாதிராயர்களின் தலைநகரில் ஒன்றாக இருந்துள்ளது.

மேலும் வாணாதிராயர்களின்  ஆட்சியில் இவ்வூர் வளம் கொழிக்கும் ஊராக மட்டுமன்றி,போரில் வாணாதிராயர் மன்னர்களுக்கு பல வெற்றிகளை ஈட்டித் தந்த இறைனாக இக்கோவில் ஐராவதீஸ்வரர் திகழ்ந்துள்ளார் என்பது வியப்பான செய்தி!

ஆனால் பாண்டியரின் தலைநகரான மதுரையை விட்டு விலகி 30 கி.மீட்டர் தொலைவில் இன்றும் ரிமோட் ஏரியாவாக இருக்கும் இப்பகுதியை வாணாதிராயர்கள் ஏன் தங்கள் ஆட்சிக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பதுவே இந்த ஊரைச் சென்றடையும் வரை நமக்குள் எழுந்த முதல் கேள்வி!ஆனால் இதை அங்கிருப்பவர்களிடமும் நாம் கேட்டோம் ஆனால் அவர்களுக்கு இதற்கான விடை தெரியவில்லை!

பின்னர் இந்த ஊர் கண்மாயில் உள்ள மடையை பார்க்கச் சென்ற போது  நம்முடைய இக்கேள்விக்கான பதில் தானாகவே கிடைத்தது! ஆனையூரினை வாணாதிராயர்கள் தேர்ந்தெடுத்தமைக்கு இவ்வூர் அமைந்திருந்த பூகோள அமைப்பே காரணமாகும்!

படம்: ஆனையூர் கண்மாய் அமைவிடம்(மலைகள் சூழந்த பகுதி)

படம்: ஆனையூர் கண்மாய் அமைவிடம்(மலைகள் சூழந்த பகுதி)

இவ்வூரைச் சுற்றி பல்வேறு மலைகள் உள்ளன,மழைப்பொழிவின் போது இம்மலையின் மீது விழும் மழைநீர் பள்ளங்களைத் தேடி கீழ் இறங்கி பெரும் வெள்ளமாக ஓடியிருக்கின்றது.

இவ்வூரைச் சூழ்ந்துள்ள இம்மலைகளினால் இயற்கையாகவே சேகரிக்கப்படும் இந்நீர்வளத்தை பயன்படுத்த நினைத்த வாணாதிராயர்கள் இவ்வூரில் பெரும் கண்மாயையும் வெட்டி அந்த நீர்பாசனத்தைக் கட்டுப்படுத்த ஓர் மடையையும் கட்டுவித்திருக்கிறார்கள்!

இச்செய்தியை இவ்வூர் கண்மாயில் உள்ள மடைக்கல்வெட்டுச் செய்தி மூலம் அறிய முடிகிறது!

படம்: ஆனையூர் கண்மாய் மடைக்கல்(கல்வெட்டு இதன் மேல்பகுதியில் உள்ளது)

படம்: ஆனையூர் கண்மாய் மடைக்கல்(கல்வெட்டு இதன் மேல்பகுதியில் உள்ளது)

 

படம்: கல்வெட்டுச் செய்தி( பெரிதுபடுத்தி (ஜீம் செய்து) எடுக்கபட்ட புகைப்படம்) ( கல்வெட்டினை நேரடியாகப் படிக்க முடிந்தவர்கள் படித்துக் கொள்லலாம் ,உங்கள் வசதிக்காக கல்வெட்டு வரிகளை கீழே கொடுத்துள்ளோம்.)

படம்: கல்வெட்டுச் செய்தி( பெரிதுபடுத்தி (ஜீம் செய்து) எடுக்கபட்ட புகைப்படம்) ( கல்வெட்டினை நேரடியாகப் படிக்க முடிந்தவர்கள் படித்துக் கொள்லலாம் ,உங்கள் வசதிக்காக கல்வெட்டு வரிகளை கீழே கொடுத்துள்ளோம்.)

கல்வெட்டு கண்ட வரிகள்

ஶ்ரீ பிள்ளை ம
ஹாவலி வாணரா
ஜன் அகம்படி முதலி
களிற் பெரியான்
உய்யவந்தானான
விக்ரம சிங்கதேவ
ன் செய்த கல் முன்
பு இதன் மேல் ஆவ
தறியும் பெருமா

இக்கல்வெட்டுச் செய்தியை “தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை”  கல்வெட்டாக வெளியிட்டுள்ளது.அது உங்கள் பார்வைக்கு(சரிபாற்பதற்காக )

2-pillai-mavali-vanathirayar-agambadi-madurai-district-inscriptions-inscription-number-352-2003-vol-ii-part-1 2-pillai-mavali-vanathirayar-agambadi-madurai-district-inscriptions-inscription-number-352-2003-vol-ii

கல்வெட்டு விளக்கம்

குறிப்பிட்ட இக்கல்வெட்டில்  வாணாதிராய அரசன் பெரிய உய்யவந்தானான விக்கிரமசிங்கதேவன் எனும் பெயருடைய பிள்ளை மாவெலி வாணாதிராயர் அகம்படி முதலி (அகம்படி (இன்றைய அகமுடையார் சாதி) இனத்தில் முதன்மையானவன் ) ஆனையூரில் ஏரி ஒன்றை வெட்டியதோடு அந்த ஏரியில் ஒர் மடையையும் ஏற்படுத்த ஆணையிட்டதன் பெயரில் ஆவதறியும் பெருமாள் என்பவன் இப்பணியைச் செய்து முடித்துள்ளான்.இவ்வாணாதிராய அரசர்கள் பாண்டிய மன்னர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!இது மேலூரில் உள்ள இருவேறு காலத்திய கல்வெட்டுக்களில் இருவேறு பாண்டிய மன்னர்கள் வாணாதிராய அரசர்களை தங்களது அம்மான்(தாய்மாமன் -அம்மாவின் தம்பி) என்றும் அண்ணாழ்வி(அண்ணன்) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதிலிருந்து தெளிவாகிறது!

சரி இப்போது   கோவிலுக்குள் நுழைவோம்!

கோவிலுக்கு முன்பான கட்டுமானம்-அரண்மனை
கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே கோவிலைச் சுற்றி கிடக்கும் பல்வேறு கலைப் பொக்கிசங்கள் நம்மை வரவேற்கின்றன

படம்: கோவிலின் முகப்புத் தோற்றம்,கவனிக்க கோவிலுக்கு முன்பாகக் கிடக்கும் அரண்மனையின் தூண் மற்றும் சிற்பத் தொகுதிகள்

படம்: கோவிலின் முகப்புத் தோற்றம்,கவனிக்க கோவிலுக்கு முன்பாகக் கிடக்கும் அரண்மனையின் தூண் மற்றும் சிற்பத் தொகுதிகள்

அரசனின் சிற்பம்

ஓர் தூண் சிற்பத்தில் கம்பிரமான ஒருவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க அவர் முன் ஒருவன் வாய்பொத்தி பேசுவதைப் போல் அமைந்துள்ளது!இது ஓர் அரிய கலைப்படைப்பாகும், இது இக்கோவிலில் குறிப்பிடப்படும் வாணாதிராய மன்னன் தனது அவையில் அமர்ந்திருக்கக்கூடிய நிலையைச் சுட்டுவதாகத் தெரிகிறது!

படம்: அரசன் அரசவையில் அமர்ந்துள்ள சிற்பம்

படம்: அரசன் அரசவையில் அமர்ந்துள்ள சிற்பம்

மேலும் ஓர் சிற்பம் நம் கவனத்தை மேலும் ஈர்க்கிறது! அது பல்லக்கில் ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் சிற்பம்!

dsc01898

படம்: பல்லக்கில் செல்லும் அரசன்

இருகைகளையும் சேவித்த நிலையில் நடுவில் வாளையோ,வேல் தாங்கி நிற்க்கும் ஒருவர் காட்சியளிக்கிறார். இவரும் மேற்குறிப்பிட்ட மன்னராகவே இருக்கக்கூடும் (பல்லக்கில் செல்லும் ஒருவர் அரசன் கட்டிய கட்டிட அமைப்பில் தோன்றுபவர் அரசன் தானே)

நடன மங்கையர் சிற்பம்
மேலும் நடன மங்கையர் ஆடுவது போன்ற சிற்பமும்,மத்தளத்தை இசைக்கும் சிற்பமும் காணப்படுவதால் இப்பகுதியில் அரண்மனை இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த அரண்மனையில் அரசனின் முன்னால் நடனமங்கையர் நடமாடி இருக்க வேண்டும் என்ற செய்தியும் புலனாகிறது.

படம்: நடனமங்கையர் சிற்பம்

படம்: நடனமங்கையர் சிற்பம்

மேலும் இப்பகுதியில் அரண்மனை இருந்ததற்கு அடையாளமாக கட்டுமானத்திற்கு பயன்படும் ஏராளமான  தூண்களும்,சிதை சிற்பங்களும் நிரம்பக் காணப்படுகின்றன! மேலும் இப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில் இப்பகுதியில் அரண்மனை இருந்த இடமே கோவிலுக்கு எதிரே இருக்கும் தென்னம்தோப்பு என்று தெரிவித்தார்கள்.ஆகவே கோவிலில் ஆரம்பித்து தென்னம்தோப்பு முடிய நீண்டதோரு அரண்மனை இருந்தது தெளிவாகிறது.

கோவிலுக்கு முன்பாகக் கிடக்கும் அரண்மனையின் தூண்கள்

கோவிலுக்கு முன்பாகக் கிடக்கும் அரண்மனையின் தூண்கள்

கி.பி 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று நக்கன் இரத்திஆர் எனும் தேவரடியார்( இறைப்பணி செய்யும் நடனமங்கை) இக்கோவிலில் நுந்தாவிளக்கு எரிக்க ஐம்பது ஆடுகள் கொடையளித்திருக்கார் என்ற செய்தியைக் காட்டுகிறது(பார்க்க  மதுரை மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 2-கல்வெட்டு எண்: 333/2003) . தேவரடியார்கள் இக்கோவிலுக்குக் கொடைஅளித்திருக்கும் செய்தி தேவரடியார்கள் இப்பகுதியில் வசித்துள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.இது இப்பகுதியில் அரண்மனை இருந்த செய்தியை மேலும் உறுதிசெய்கிறது!

எத்தனையோ தேவரடியார்கள(இறைப்பணியாளர்கள்)கோவில்களுக்கு நிரம்ப தானம் அளித்த செய்தியை வரலாற்று நெடுகிலும் காணமுடிகிறது இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்களாக விளங்கிய இவர்கள் பின்னாட்களில் பழிக்கும்படியான செயல்களில் ஈடுபடுத்தியதில் பின்னாட்களில் ஆட்சிக்கு வந்தவர்களின் அடாதசெயல்களே காரணம் என்பது தெரிகிறது!

புலிக்குத்தி சிற்பம்!
மேலும் சுவாரஸ்ய சிற்பமாக ஒரு வீரன் புலியைக் குத்துவது போன்ற சிற்பமும் காணப்படுகிறது.

படம்: புலியுடன் போராடும் வீரன்(கவனிக்க புலியின் ) வால்

படம்: புலியுடன் போராடும் வீரன்(கவனிக்க புலியின் ) வால்

இது இப்பகுதியில் அன்று புலிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற செய்தியைக் கூறுகிறது.அருகில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டைப் பகுதியில் திருமலைநாயக்கர் நகர்வலம் வரும்போது தாக்க முயன்ற புலியை ஒரு வீரன் கொன்ற செய்தி செப்பேடு ஒன்றில் பதிவாகியுள்ளது.திருமலை நாயக்கர் ,இப்பகுதியை ஆண்ட வாணாதிராயருக்கு காலத்தால் மிகவும் பிந்தையவர்.அதாவது திருமலைநாயக்கர் கி.பி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவ்ர் ஆனால் இவ்வூரில் வாணாதிராயர் காலமானது கி.பி 9,10 ம் நூற்றாண்டில் தொடங்குகிறது. திருமலைநாயக்கர் காலத்திலேயே புலிகள் அருகில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் வசித்திருந்தால் 800 ஆண்டுகள் முந்தைய வாணாதிராயர் காலத்தில் அதுவும் நாகமலைப் புதுக்கோட்டையை விட அடர்ந்த காடுப்பகுதியாக விளங்கிய இப்பகுதியில் அக்காலத்தில் புலிகள் எத்தகைய எண்ணிக்கையில் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது!

கோவில் நந்தவனத் தெப்பம்
மேலும் கோவிலுக்கு அருகில் பெரிய அளவிலான  தெப்பம் ஒன்று காணப்படுகிறது.இத்தெப்பத்தில் படிகள் அமைக்கப்பட்டு அது கீழ் வரை செல்கிறது. அருகில் உள்ள கண்மாயிலிருந்து கால்வாய் வழியாக இத்தெப்பம் தண்ணீர் பெற்றிருக்க வேண்டும்!

படம்: கோவில் நந்தவனத் தெப்பம்

படம்: கோவில் நந்தவனத் தெப்பம்

இன்று கண்மாயே நீரில்லாமல் இருப்பதால் இத்தெப்பமும் தண்னீர் இல்லாமல் வெறுமனே காட்சியளிக்கிறது. இவ்வூரில் விசாரிக்கையில் கோவிலில் நந்தவனம் இருந்ததாகவும் அதைப் பராமரிக்கின்ற வேலைக்காக இது கட்டப்படிருந்தது என்றும் களவிவரம் அளித்தார்கள். அரண்மனை அருகில் இருந்ததால் அரசகுடும்பத்தினர் இத்தெப்பத்தை நீராட பயன்படுத்தியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

மேலும் கோவிலைச் சுற்றி வாணாதிராயர் காலத்து கலைப்பொக்கிஷங்கள் காணப்படுகின்றன! அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் வாணாதிராயர் காலத்து நந்தி மற்றும் கடவுளர் படிமங்கள் காணக்கிடைக்கின்றன!

அதில் முக்கியமானது வாணாதிராயர் காலத்து நந்தியாகும்! வாணாதிராயர் காலத்து நந்தியானது மற்ற பகுதிகளில் உள்ள நந்தி உருவங்களைவிட மிகவும் வேறுபட்டது.நந்தியின் கழுத்தில் மணிகளும்,அணிகளும் நிறைந்து காலிலும் அணிசெய்யப்பட்ட  அழகுற நேர்த்தியாக செய்யப்பட்ட நந்திகள் வாணாதிராயர் சிற்பக்கலையின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

படம்: அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள வாணாதிராயர் காலத்து நந்தி!

படம்: அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள வாணாதிராயர் காலத்து நந்தி!

கோவில் வளாகத்திலேயே இவ்வளவு கலைப்புதையல்கள் இருப்பின் ஊரை இன்னும் சுற்றிவந்திருந்தல் இன்னும் அருமையான செய்திகளும்,சிற்பங்களும் கிடைத்திருக்கும்.

சரி! இன்னும் நாம் கோவிலுக்குள்ளேயே நுழையவில்லை அல்லவா!உள்ளே சென்று பார்போமா?

முதலாவதாக கோவிலைச் சுற்றி வெளிச் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது.இந்த வெளிச்சுற்றுச்சுவர் பின்னாட்களில் அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.இதில் உள்ள பூதகணங்களின் சிற்பங்கள் சமீபத்தையவை என்பதை அதில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பி போன்ற பொருட்களும்,  அதன் சிற்ப அமைப்பும் இதனை எடுத்துக்காட்டுகிறது.

இந்தச் சுற்றுச்சுவர் வழியாக நுழைந்தாம் முதலில் நம் கண்ணில்படுவது வாணாதிராயர் கட்டிய ஆறுகால் மண்டபம் ஆகும்.

படம்: கோவில் ஆறுகால் மண்டபம்

படம்: கோவில் ஆறுகால் மண்டபம்

ஆறுகால் மண்டபம்
இந்த ஆறுகால் மண்டபத்தைச் சுற்றி கோவிலின் பிரகாரத்தையும் கோவிலையும் சுற்றி வாணாதிராயர்கள் பழங்கற்களிலான சுவர் ஒன்றை எழுப்பியுள்ளார்கள்!

படம்: கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம் ( கற்களால் கட்டப்பட்ட பிரகாரச் சுவர்)

படம்: கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம் ( கற்களால் கட்டப்பட்ட பிரகாரச் சுவர்)

இந்த ஆறுகால் மண்டபத்தின் தூண்களாக பயன்படுத்தப்பட்ட கற்களே  மற்றபகுதியில் பயன்படுத்தப்பட்ட தூண்களைப் போல் அல்லாது மிகவும் வேறுபட்டு அமைந்துள்ளன!மற்ற பகுதிகளைப் போல் அல்லாமல் இத்தூண்களின் நடுப்பகுதியில் கோடுகள் போன்று செதுக்கப்பட்டுள்ளன!மேலும் தூணின் கீழ்பகுதியில் சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன அதே போல் தூணின் மேல்பகுதியில் விதானத்தோடு இணையும் பகுதியில் அழகிய சிற்பங்களும் காணப்படுகின்றன!

படம்: ஆறுகால் மண்டபத்திலுள்ள பாண்டியர் இலட்சினை(சென்டு மற்றும் இரட்டைக்கயல்)

படம்: ஆறுகால் மண்டபத்திலுள்ள பாண்டியர் இலட்சினை(சென்டு மற்றும் இரட்டைக்கயல்)

இம்மண்டத்தில்  பாண்டியர்களின் இலட்சினையான  சென்டுடன் கூடிய மீன் சின்னம் காணப்படுகிறது! இக்கோவில் மண்டபத்தை கட்டியவன் ஓர் வாணாதிராயன் எனும் கல்வெட்டுச் சான்று இருக்கும்போது இதில் பாண்டியர்களின் இலட்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது,இவ்வாணாதிராயர்கள் பாண்டிய மன்னர்களின் உறவினர்கள் என்று கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகளை உறுதிசெய்யும் நடைமுறை ஆதாராமாக இருக்கின்றது!

கோவில் பிரகாரம்
இந்த ஆறுகால் மண்டபத்தை கடந்து சென்றால் தென்படுவது கோவிலின் உட்பிரகாரமாகும்.

படம்: கோவில் உட்பிரகாரம்

படம்: கோவில் உட்பிரகாரம்

இந்த பிரகாரத்தில் இறைவனான (ஐராவதேஸ்வர்-மூலவர் ) ,இறைவியான மீனாட்சி அம்மனுக்கும் தனிச் சன்னதி அமைந்துள்ளது.

மேலும் பிரகாரத்தின் யோஸ்டா தேவி எனும் மூத்த தேவிக்கு சிலையும்,இரட்டை விநாயகர்,பைரவர் சிலையும்,வள்ளி தெய்வானை உடனுறை முருகனுக்கான தனிச்சன்னதியும் உள்ளது!

படம்: முருகன் சன்னதி

படம்: முருகன் சன்னதி

படம்: இரட்டை விநாயகர் சன்னதி

படம்: இரட்டை விநாயகர் சன்னதி

படம்: பைரவர் சன்னதி

படம்: பைரவர் சன்னதி

படம்: மூத்த தேவி சிலை

படம்: மூத்த தேவி சிலை

மேலும் கோவில் பிரகாரத்தில் கோவிலுக்குரிய கிணறு ஒன்றும் உள்ளது.இக்கிணற்று நீரே கோவில் பூசைக்கும்,சமையல் பணிக்கும் பயன்பட்டிருக்க வேண்டும்!கோவிலில் மடப்பள்ளி(சமையல் அறை இயங்கியதற்கு சான்றாக பெரிய அளவிலான அம்மிக்கற்கள் கோவில் பிரகாரத்தில் காணப்படுகின்றன)

படம்: கோவில் மடப்பள்ளியில் பயன்பட்ட பழமையான அம்மிக்கல்

படம்: கோவில் மடப்பள்ளியில் பயன்பட்ட பழமையான அம்மிக்கல்

இக்கோவிலின் பிரகாரம் முழுக்க பாண்டியர்,சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் நிரம்பிக்கிடக்கின்றன.கோவிலின் கருவறைச் சுவற்றிலும்,தூண்களிலும்,சுற்றுச்சுவரிலும், தனிக்கல் என எல்லாப்பகுதிகளிலும் கல்வெட்டுக்கள் நிரம்பக் காணப்படுகின்றன!

படம்: பிரகாரத் தூணில் உள்ள ஓர் கல்வெட்டு

படம்: பிரகாரத் தூணில் உள்ள ஓர் கல்வெட்டு

படம்: கோவிலில் உள்ள தனியான நிலைக் கல்வெட்டு

படம்: கோவிலில் உள்ள தனியான நிலைக் கல்வெட்டு

மூலவர் சன்னதி-ஐராவதீஸ்வரர்
இக்கோவிலின் மூலவராக   ஈசனின் அம்சமான ஐராவதீஸ்வரர்  கருவறையில் உள்ளார். கருவறைக்கு முன்பாக நந்தி இறைவனின் முன்பாக வீற்றிருக்கிறது!

படம்: கோவில் நந்தி

படம்: கோவில் நந்தி

கோவிலின் கருவறையின் நுழைவுவாயிலில் இருப்பக்கமும் பெரிய அளவிலான துவாரபாலகர்கள் நிற்கிறார்கள்! வாணாதிராயர் சிற்பக்கலையின் சிறப்பே,பெரிய அளவிலான சிற்பங்களும் அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியான கலையம்சமுமாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் இச்சிற்பங்கள் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

படம்: துவாரபாலகர்களுடன் மூலவர் காட்சி

படம்: துவாரபாலகர்களுடன் மூலவர் காட்சி

கருவறையின் உள்ளே ஐராவதீஸ்வரர் லிங்க வடிவில் நமக்கு காட்சியளிக்கிறார்!நாகத்தை அணியாகக் கொண்ட லிங்க உருவம்.கண்கொள்ளாக் காட்சி! வாணாதிராயர் காலத்தில் வாணாதிராயர்களும் ,பாண்டியர்களும் இக்கோவிலில் உள்ள இறைவனை வணங்கிவிட்டுத் தான் போருக்குச் செல்வார்களாம்!

படம்: மூலவர் ஐராவதீஸ்வரர் தரிசனம்

படம்: மூலவர் ஐராவதீஸ்வரர் தரிசனம்

வாணாதிராய அரசர்கள் தங்கள் உறவினர்களான பாண்டியர்களுக்காக பல நாடுகளை சோழநாடு,சேரநாடு,பல்லவநாடு,போசாளநாடு,கொங்குநாடு,ஈழநாடு போன்ற நாடுகளை வென்றான் என்பதை கல்வெட்டுச் செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன!

வாணாதிராய மன்னர்கள் பாண்டியனின் புகழை திசை எங்கும் பரப்பினர் எனும் செய்தியை

“செழியர் கயலைத் திசை வைத்த வாணன்”
“கயல்கொடி பொன்வரையில் திகழ்வித்த வாணன்”
“வழுதியம் நாமம் வளர்க்கின்ற வாணன்”

என்ற 13ம் நூற்றாண்டில் அமைந்த “தஞ்சைவாணன் கோவை ” எனும் நூல் எடுத்தியம்புகிறது!

இறைவி-மீனாட்சி அம்மை!
கோவிலின் இறைவியாக மீனாட்சி அம்மை அமைந்துள்ளார்.இச்சனத்திக்கு முகப்பில் இறைவியை கஜேந்திரன் எனும் யானை வணங்குகின்ற  காட்சி அழகுற செதுக்கப்படுள்ளது.

படம்: மீனாட்சி அம்மன் சன்னதி முகப்பு சிற்பம்

படம்: மீனாட்சி அம்மன் சன்னதி முகப்பு சிற்பம்

சன்னதியின் உள்ளே அம்மை நின்ற கோலத்தில் காட்சியருளுகிறார்.

படம்: மீனாட்சி அம்மன் காட்சி

படம்: மீனாட்சி அம்மன் காட்சி

இச்சன்னதியில் மேலும் சிறப்பம்சமாக கேட்டதை அளிக்கும்  அபூர்வ ஶ்ரீசக்கரம் கற்களில் செதுக்கப்பட்டுள்ளது!

படம்: மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள ஶ்ரீ சக்கரம்

படம்: மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள ஶ்ரீ சக்கரம்

கோவிலுக்குச் சொந்தமாக உற்சவ மூர்த்தி உள்ளதாகவும் அது சோழவந்தானில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சிறப்பு நாட்களில் இந்த உற்சவமூர்த்தி இக்கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

பாண்டியர் வழிபட்ட புராதனச் சிறப்புடைய இக்கோவில் இன்று உலகத்தவர் பலருக்கு அறியாத வண்ணம்  ஒதுக்குப்புறமாக காணப்படுகிறது.கோவில் மட்டுமல்ல வாணாதிராயர் காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த இவ்வூர் இன்று ஆள் அரவமற்று மற்ற ஊர்களில் இருந்து தனித்து காணப்படுவது காலத்தின் கோலம்!

ஆகவே மக்களே! மதுரையில் இருந்து உசிலம்பட்டி செல்லும்போதோ! அல்லது திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும்போதோ ஶ்ரீசக்கரம் அமைந்துள்ள இந்த புராதன ஆலயத்தை சென்று பாருங்கள்! வணங்குங்கள்!இறையருள் கிட்டுவதாக!

பாராட்டுதல்கள்
உசிலம்பட்டியில் உள்ள அன்பு டிஜிட்டல் ஸ்டீடியோ நிறுவனத்தார் இக்கோவிலில் அமைந்துள்ள சில கல்வெட்டுக்களை அழகிய முறையில் படம்பிடித்து காட்சிப்படுத்தியுள்ளார்கள்(அவர்களுக்கு எங்கள் பாராட்டுதல்கள்)

கல்வெட்டு காட்சிப்படுத்துதல்( அன்பு ஸ்டுடியோ,உசிலம்பட்டி)

கல்வெட்டு காட்சிப்படுத்துதல்( அன்பு ஸ்டுடியோ,உசிலம்பட்டி)

எங்கள் நன்றிகள்!
இக்கோவிலின் புராதனச் சிறப்பை உணர்ந்து கோவிலில்  அபிசேகம் பூக்களுடன் தேவாரம்,திருவாசகம் பாடி சிறப்புற பூஜை செய்துவரும் இவ்வூரைச் சேர்ந்த இந்த சிவத்தொண்டர்கள்( திருமதி ஷீலா மற்றும்  திருமதி.M.முத்து ) எங்கள் பாதம் பணிந்த நன்றிகள்!

சிவத்தொண்டர்கள்( திருமதி ஷீலா மற்றும் திருமதி.M.முத்து )

சிவத்தொண்டர்கள்( திருமதி ஷீலா மற்றும் திருமதி.M.முத்து )

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”-மு.சக்தி கணேஷ்- Thirumangalam.org இணையதளத்திற்காக!