திருமங்கலம் அருகே பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்புதிருமங்கலம் அருக…


திருமங்கலம் அருகே பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருமங்கலம் அருகே பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் கொடுத்த தகவலின்படி, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர், பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில், பேராசிரியர் குழுவினர் உச்சப்பட்டி கிராமத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது சூலாயுதம் பொறிக்கப்பட்டு, கிரந்த எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில், ‘‘இந்த கல்வெட்டு 9ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். பாண்டியர் கால ஆட்சியில் வழிபாட்டுத்தலங்களில் தினசரி வழிபாடு செய்யவும், நந்ததீபம் ஏற்றவும், சமயச் சொற்பொழிவு நிகழ்த்தவும், கோயில் பராமரிப்புகளுக்கும், பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களை கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். இவைகளுக்கான வரியையும் நீக்கியுள்ளனர். இந்த நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை, கோயில் பராமரிப்புக்கு செலவிட்டுள்ளனர். இவற்றை தேவதானம் என அழைத்தனர்.

இந்த நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில், நான்கு மூலைகளிலும் எல்லைக்கல் நடுவர். குறிப்பாக சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலங்களை (திரிசூல குறியீடு) திருநாமத்துக்காணி எனவும், பெருமாள் கோயிலுக்கு வழங்கும் நிலங்களை (சங்கு, சக்கரம் குறியீடு) திருவிடையாட்டம் எனவும், சமணர் கோயிலுக்கு வழங்கும் நிலங்களை (மக்குடை குறியீடு) பள்ளிசந்தம் எனவும் அழைத்துள்ளனர்.

உச்சப்பட்டியில் மருதகாளியம்மன் கோயில் அருகே, கண்டெடுக்கப்பட்ட தனித்தூண் கல்வெட்டு, 5 அடி நீளம், 1.5 அடி அகலம், மூன்று வரி கிரந்த எழுத்துகளுடன் உள்ளது. கல்தூணின் கீழ் பகுதியில், சிவன் கோயிலுக்கு நிலதானம் வழங்கியதற்கான திரிசூலம் கோட்டுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு எழுத்துகள் அதிகமாக தேய்ந்துள்ளது. ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் சாந்தலிங்கத்தின் உதவியுடன் படிக்கப்பட்டது.

இந்த கல்வெட்டில் அவனி, மாறன், மடை, தம்மம், அவந்தி, வேந்தன் என தொடர்ச்சியற்ற வார்த்தைகள் உள்ளன. இக்கல்வெட்டு மாறன் வல்லபன் ஆட்சிக்காலம், அதாவது (கி.பி 835 முதல் கி.பி 862) பொறிக்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டின் எழுத்து வடிவை பொருத்து அது கி.பி.9ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பகுதியில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த குதிரை வீரன் சிற்பம், விஜயநகர சின்னம், வராகன் கோட்டுருவம் ஆகியவை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#tamil #archeology #nadukal #kalvettu #nadukarkal #TholliyalThagalvalgal
#MyTNMyHeritage #TamilNadu #IncredibleIndia
#TamilNaduTourism #Ancient #Heritage #Photography #Art #Culture #Instagood #Instagram #ArtofVisuals #Wanderlust #thirumanagalam


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo